×

முதுமக்கள் தாழி, எலும்புக்கூடுகள் உடைப்பு சவடு மண் கொள்ளை லாரிகளை பொதுமக்கள் திரண்டு முற்றுகை: பரமக்குடி அருகே பரபரப்பு

பரமக்குடி: பரமக்குடி அருகே சவடு மண் அளவுக்கு அதிகமாக அள்ளிய இடத்தில் பழங்கால முதுமக்கள் தாழி, எலும்புக்கூடுகள் உடைந்து கிடந்தன. இதனால் பொதுமக்கள் திரண்டு மண் அள்ளிய லாரிகளை முற்றுகயைிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே லட்சுமிபுரம் கிராம நிலத்தில் சவடு மண் எடுப்பதற்கு அனுமதி பெற்ற சிலர், ஜேசிபி மூலம் ஆழமாக தோண்டி லாரிகளில் அதிகளவு மண் அள்ளிச் சென்றனர். தகவலறிந்த லட்சுமிபுரம், புதுக்குடி, ஊரக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் முன்னாள் ஊராட்சி தலைவர் பூமிநாதன் தலைமையில் நேற்று சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு அதிகளவில் மண் அள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், பழங்காலத்து முதுமக்கள் தாழி, மண்பானைகள், எலும்புக்கூடு போன்றவை உடைந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், மண் அள்ளிய லாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகரன் உடனே சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது கிராம மக்கள், ‘‘இங்கு மண் அள்ளக்கூடாது. நீராதாரம் பாதிக்கப்படும். மண் அள்ள தடை விதிக்க வேண்டும்’’ என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எம்எல்ஏ, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை வரழைத்து விசாரித்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சவடு மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும், கிராம மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மண் அள்ளுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.

இங்கேயும் ஒரு கீழடி?
ஊரக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் பூமிநாதன் கூறுகையில், ‘‘விதி மீறி 5 அடி ஆழத்தில் மண் எடுத்து விற்பனை செய்கின்றனர். அதற்கு கீழ் மணல் உள்ளதால் அதை கோடி கணக்கில் விற்பனை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். எனவே மண் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் 3 கிராம மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், இங்கு அகழாய்வு மேற்கொண்டால் கீழடியைபோல் பழங்கால நகரம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

Tags : public ,Paramakudi , Elderly humiliation, skeletal fractures, carcasses, trucks, siege
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...