×

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: ஜேசிபி முன்பு படுத்து பெண்கள் போராட்டம்

* போலீசாருடன் தள்ளுமுள்ளு
* திருவாடானை அருகே பரபரப்பு

திருவாடானை: திருவாடானை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் ஜேசிபி முன்பு படுத்து போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் நடந்த தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ளது நெய்வயல் கிராமம். இங்குள்ள வடக்கு குடியிருப்பு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் சாலையை ஆக்கிரமித்து வீடு மற்றும் கழிப்பறைகளை கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து திருவாடானை தாசில்தார் மாதவன், துணை தாசில்தார் சேதுராமன் ஆகியோர் ஏராளமான போலீசாருடன் நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். அப்போது பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது திடீரென பெண்கள் சாலையில் படுத்து ஜேசிபியை செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி அப்புறப்படுத்தினர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் கட்டுமானங்களை இரண்டு நாட்களுக்குள் உரிமையாளர்களே அகற்றிக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் எச்சரித்து விட்டு சென்றனர்.

Tags : removal ,women ,JCP , Occupy, remove, protest, JCP, women struggle
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது