×

கல்லிடைக்குறிச்சியில் வனத்துறை அலட்சியத்தால் கர்ப்பிணி யானை சாவு

வி.கே.புரம்: கல்லிடைக்குறிச்சி அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த நோயுற்ற கர்ப்பிணி யானை வனத்துறையின் அலட்சியத்தால் நேற்று தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக நோயுற்ற யானை ஒன்று சுற்றி வந்தது. நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் மலையடிவாரத்தில் உள்ள 80 அடி கால்வாய் பகுதியில் அந்த யானை நடமாட்டம் காணப்பட்டது. உடல் மெலிந்த நிலையில் நடக்க முடியாமல் சோர்ந்து அடிக்கடி ஆங்காங்கே படுத்து இளைப்பாறியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் யானையை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இந்நிலையில் நேற்று காலை மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அந்த யானை இறந்து கிடந்தது. தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து சென்று யானையின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு மணிமுத்தாறு வனப்பகுதியில் யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 கடந்த சில நாட்களாக கல்லிடைக்குறிச்சி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இந்த நோயுற்ற யானையை காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. யானையை மீட்டு சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்பது அப்பகுதி மக்கள் கருத்தாக உள்ளது. வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை இறந்தது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்பை வனச்சரகர் (பொறுப்பு) சரவணகுமார் கூறுகையில், ‘இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சுற்றித்திரிந்த இந்த யானை செரிமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தது. அதற்கு தேவையான மருந்துகளை யானை நடமாடும் வழியில் வைத்தோம்.

ஆனால் யானை அதை சாப்பிடவில்லை. தற்போது பிரேத பரிசோதனையில் கர்ப்பிணியாக இருந்த இந்த யானையின் பற்களில் நோய் ஏற்பட்டிருந்ததால் உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. 15 வயதான இந்த யானை 220 செ.மீ. உயரம் உள்ளது. மணிமுத்தாறு வனப்பகுதியில் யானை அடக்கம் செய்யப்பட்டது’ என்றார்.

Tags : Kallidaikurichi , In Kallidaikurichi, forest department, pregnant elephant due to negligence, death
× RELATED விஷம் குடித்த காவலாளி சாவு