×

நவராத்திரி கொலுவிலும் இடம்பெறும் கொரோனா: நெல்லையில் ஒரே வீட்டில் 5 ஆயிரம் பொம்மைகள்

நெல்லை: நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நெல்லையில் ஒரு வீட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தாண்டு புதிய வரவாக ‘‘கொரோனா’’ விழிப்புணர்வு பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நவராத்திரி திருவிழா, நாளை மறுநாள் (17ம் தேதி) தொடங்குகிறது. இதையொட்டி வீடுகளில் கொலு வைத்து காலை மற்றும் மாலையில் நைவேத்தியம் படைத்து வழிபாடு நடத்துவர். நெல்லை தியாகராஜநகர் 7வது தெருவில் உள்ள சிவா இல்லத்தில் மரகதம் அம்மையார் என்பவர் 45வது ஆண்டாக ஐதீக முறைப்படி மெகா கொலு வைத்துள்ளார். வீட்டிலுள்ள தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் கொலு பொம்மைகளை வைத்து அழகுபடுத்தியுள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு கொலு பொம்மைகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் இங்கு அழகுற வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் டிரன்டிற்கு ஏற்ப புதிய கொலு பொம்மைகளை தஞ்சாவூரில் ஆர்டர் செய்து வாங்குவது இவரது வழக்கம். கடந்த ஆண்டு அத்திவரதர் பொம்மையை ஆர்டர் செய்து காட்சிப்படுத்தினார். இந்த ஆண்டு தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தை குறிக்கும் வகையில் தஞ்சை பெரிய கோயில் செட் மற்றும் உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு செட் வைத்துள்ளார். கொரோனா நோய்க்கு மருந்தாக 18 சித்தர்களின் உருவ பொம்மைகளும் வைத்துள்ளார். அவர்கள் அருளிய மருந்து பொருட்களே இன்று கொரோனாவை வெல்வதை குறிக்கும் வகையில் நவதானியங்கள் உள்ளிட்ட தமிழ் மருந்து பொருட்கள் மற்றும் குறிப்புகளையும் வைத்துள்ளார். மேலும் ஆங்கில மருத்துவ முறையில் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள், மாஸ்க், சுகாதார விழிப்புணர்வு போன்றவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார்.

யசோதா கிருஷ்ணரை குழந்தையாக மடியில் வைத்து பாலூட்டும் பொம்மையை வைத்து தாய்ப்பால் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார். இவை தவிர அஷ்ட பைரவர், வியாசர் பூஜை, ஆண்டாள் பிறப்பு, சூர்ய ரதம், ராமர் வனவாசம், திருநெல்வேலியில் திருவையாறு, மஞ்சள் நீராட்டு விழா, சக்கரத்தாழ்வார், வெளிநாட்டில் தமிழர்கள் வழிபடும் தெய்வங்களின் பொம்மைகள், அரசின் விழிப்புணர்வு திட்டங்கள், மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா பொம்மைகள் உள்ளிட்டவைகளும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான பொம்மைகளை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்துள்ளார்.

இவரது வீட்டில் வைக்கப்படும் கொலுவை ஆண்டுதோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடுவர். இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக நேரில் வருவதை தவிர்க்குமாறும் மரகதம் அம்மையார் கேட்டுக் கொண்டுள்ளார். இவருடன் சேர்ந்து இவரது மகள் ராமலட்சுமி சுதாகர், மருமகள் சாந்தி மாரியப்பன், பேத்தி மரகத சுவேதா ஆகியோர் கடந்த ஒரு மாதமாக இந்த கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். கொலு துதிப்பாடலுடன் கொரோனா ஒழியவும் இறைவனை வேண்டி பாடல் பாட இருப்பதாகவும் மரகதம் அம்மையார் குறிப்பிட்டார்.

Tags : Corona ,Navratri ,Nellai ,house , Navratri, Koluvilum, Corona, Nellaiyil, 5 thousand toys
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...