×

சொத்து வரி விவகாரத்தில் அனுபவமே பாடம் ; தவறைத் தவிர்த்திருக்கலாம் : நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபம் சொத்து வரி விவகாரத்தில் தவறை தவிர்த்திருக்கலாம் அனுபவமே பாடம் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரம் குறித்து எழுந்த சர்ச்சையால் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகவேந்திரா மண்டப சொத்து வரி…நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடந்து என்ன ?

நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு கடந்த ஏப்ரல் முதல் சொத்து வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மண்டபத்திற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி பாக்கி உள்ளது என்றும், அதை கட்டுமாறும் சென்னை மாநகராட்சி நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவுறுத்தியது.இதையடுத்து, திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்துவரியை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என்று ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘செப்டம்பர் 23ல் கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29ம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடர முடியும். நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நினைவூட்டல் தர வேண்டுமே’’ என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, நினைவூட்டல் கடிதம் கொடுத்து விடுகிறோம். இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, மனு வாபஸ் தொடர்பான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். தொடர்ந்து, ரஜினி தரப்பு வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் வாபஸ் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார்.இதனிடையே இன்றுக்குள் சொத்துவரி செலுத்தாவர்களுக்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags : Rajinikanth , சொத்து வரி,பாடம்,நடிகர் ரஜினிகாந்த், ட்வீட்
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...