×

இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் டாக்டர் அப்துல் கலாம் : பிரதமர் மோடி, அமிதஷா, ராஜ்நாத் சிங், கமல் உள்ளிட்டோர் புகழாரம்

சென்னை : மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது புகைப்படங்களையும், அவர் மாணவர்களுக்கு கூறிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டின் வளர்ச்சிக்கு அப்துல்கலாம் அளித்த பங்களிப்பை நாடு என்றும் மறக்காது. லட்சக்கணக்கான மக்களுக்கு கலாமின் வாழ்க்கை ஊக்கமளிப்பதாக உள்ளது, என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘புதிய மற்றும் வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்காக, நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக கலாம் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அவர் தொடர்ந்து வரும் நம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா

தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரும், இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணை திட்டங்களை கட்டமைத்தவருமான டாக்டர் கலாம் எப்போதும் வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் மற்றும் கல்வித் துறையில் அவரது பங்களிப்பு என்றும் உத்வேகம் அளிப்பதாக உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா

முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்குவதாகவும், தனது விசாலமான பார்வை மற்றும் மனிதநேயத்திற்காக பணியாற்றி உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்திய மக்கள் ஜனாதிபதியாக அவர் நினைவுகூரப்படுகிறார் என்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி. எனத் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எல்லாத் தரப்பினரின் அன்பையும் பெற்று,மக்களின் குடியரசுத்தலைவராக திகழ்ந்த போற்றுதலுக்குரிய டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று. மாணவர்கள்,இளைஞர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் கனவுகளை விதைத்த ஏவுகணை நாயகரை எந்நாளும்  போற்றிடுவோம்! எனத் தெரிவித்துள்ளார். 

Tags : Abdul Kalam ,Modi ,India ,Amit Shah ,Rajnath Singh ,Kamal , இந்தியா, டாக்டர் அப்துல் கலாம் ,பிரதமர் மோடி, அமிதஷா, ராஜ்நாத் சிங், கமல்
× RELATED ராமநாதபுரத்தில் விமான நிலையம் நவாஸ்கனி எம்பி தேர்தல் அறிக்கை வெளியீடு