×

சென்னிமலை அருகே டாஸ்மாக் ‘பார்’ ஆக மாறிய பயணிகள் நிழற்குடை: பொதுமக்கள் கடும் அவதி

ஈரோடு: சென்னிமலை அருகே பயணிகள் நிழற்குடையை குடிமகன்கள் டாஸ்மாக் பாராக மாற்றிவிட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னிமலை ஒன்றியம் எக்கட்டாம்பாளையம் கிராமம் சில்லாங்காட்டு வலசு பிரிவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கும் குடிமகன்கள் அருகில் உள்ள பஸ் ஸ்டாப் நிழற்குடையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். காலை முதல் இரவு வரை இதே நிலை நீடிப்பால், பஸ்சுக்கு செல்லும் பயணிகள் வெயில், மழையில் நின்று கொண்டிருக்க வேண்டிய அவல நிலைக்கு ஏற்படுகிறது. மேலும் மது போதையில் அரை நிர்வாண கோலத்தில் அங்கேயே படுத்துக்கொள்வது, காலி பாட்டில்களை அங்கேயே உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள், மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை மற்றும் இரவில் வீடு திரும்பும் பெண்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது:  பஸ் ஸ்டாப் நிழற்குடையை குடிமகன்கள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் பெண்கள், குழந்தைகள் ஒரு வித அச்சத்துடன்தான் அப்பகுதியை கடக்க வேண்டி உள்ளது. மேலும் அடிக்கடி போதையில் தகராறில் ஈடுபடுவது, காலி பாட்டில்களை உடைத்து ஆங்காங்கே வீசுவது என தினமும் அப்பகுதி மக்கள் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை. எனவே பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது நிழற்குடையை பாராக மாற்றுவதை தடுக்க வேண்டும். இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

Tags : Passenger umbrella ,bar ,suffering ,Tasmac ,Chennimalai , Chennimalai, Tasmac ‘Bar’, Passenger Umbrella
× RELATED பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு