பொன்னேரியில் சட்டவிரோதமாக செயல்படும் 119 இறால் பண்ணைகளை மூட உத்தரவு: கலெக்டர் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை: பொன்னோரியில் சட்டவிரோதமாக செயல்படும் 119 இறால் பண்ணைகளை மூட திருவள்ளூர் கலெக்டர் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், பாக்கம் கிராமத்தில் பட்டா நிலங்களில் உரிய அனுமதி இல்லாமலும், புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாகவும் இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சிட்டேரி ஏரிப்பகுதியில் உள்ள காலி இடங்களிலும், பழவேற்காடு ஏரியை சுற்றிலும் சட்டவிரோதமாக இறால் பண்ணைகள் செயல்படுகிறது.

இதனால் விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விதிகளுக்கு புறம்பாக சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இதேபோல் மேலும் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தீர்ப்பாயம், சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் குறித்து திருவள்ளூர் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்தநிலையில் அந்த வழக்குகள் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது திருவள்ளூர் கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்ட 119 இறால்பண்ணைகளை மூட பொன்னேரி உதவி கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, 113 இறால் பண்ணைகளின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்ட 15 இறால் பண்ணைகளுக்கு தலா ரூ.3 லட்சத்து 93 ஆயிரத்து 750 வீதம் மொத்தம் 59 லட்சத்து 6 ஆயிரத்து 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 13 இறால் பண்ணைகளுக்கு தலா ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 750 வீதம் மொத்தம் 67 லட்சத்து 43 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இறால் பண்ணைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கமிட்டி இறால் பண்ணைகள் அமைந்துள்ள பகுதிகளிலும், அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் மண் மற்றும் நீர் பரிசோதனையை மேற்கொள்ள மாதிரியை சேகரித்துள்ளது.இது, பொன்னேரியில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மையம் மற்றும் காக்களூரில் உள்ள வேளாண்மை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இதுவரை பெறப்படவில்லை. முடிவுகளை பெற்றதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விசாரணைக்கு பின்பு, இந்த அறிக்கை அடிப்படையில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் மூடப்பட்டது குறித்து தெரிவிக்க கலெக்டருக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதத்துக்கு தீர்ப்பாயம் தள்ளிவைத்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>