திருப்போரூரில் நடந்த கொலையில் தலைமறைவான ரவுடி சென்னையில் கைது

திருப்போரூர்: சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (28). பிரபல ரவுடி. அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளியாக இருந்தார். ரவீந்திரன் மீது பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பல காவல் நிலையங்களில் உள்ளன. இதில், மாதவரம்செந்தில் கொலை வழக்கில் கைதான ரவீந்திரன், கடந்த சில மாதங்களுக்கு முன் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்ததும், ரவீந்திரனை கொல்வதற்கு எதிர்கோஷ்டியான கல்வெட்டு ரவி தரப்பினர் முடிவு செய்தனர்.

இதுபற்றி அறிந்த ரவீந்திரன், சென்னை புறநகர் பகுதியான திருப்போரூர், பாரதி நகரில் வாடகை வீட்டில் தனது மனைவி மலர்க்கொடி மற்றும் 2 குழந்தைகளுடன் குடியேறினார். அங்கு, சென்னையில் கஞ்சா வாங்கி வந்து, திருப்போரூர் பகுதியில் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட எதிர் கோஷ்டியினர், கடந்த 2017, டிசம்பரம் 1ம் தேதி, திருப்போரூர் ரவுண்டானா அருகில், ரவீந்திரனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது.இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபல ரவுடிகளான கமருதீன் (28), குமரேசன் (27), ராம்கி (எ) ராமகிருஷ்ணன் (29), சந்தோஷ் (21), அப்துல் கறீம் (21) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாணையில் உள்ளது.

இதற்கிடையில், ஜாமீனில் வெளியே வந்தவர்களில் கமருதீன், கடந்த ஓராண்டாக வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவரை கைது செய்யும்படி, கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், கமருதீனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கமருதீன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அங்கு சென்று, கமருதீனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் திருப்போரூர் காவல் நிலையத்தில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

* தானாக வந்து சிக்கிய கமுருதீன்

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த கமருதீனை, திருப்போரூர் போலீசார், அவன் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதனால் அங்கிருந்து தப்பித்த கமருதீன் அவ்வழியே சென்ற ஒரு காரை மடக்கி லிப்ட் கேட்டுள்ளான். காரில் வந்தவர்களும் காரை நிறுத்தி அவனை ஏற்றிக் கொண்டனர். அப்போதுதான் திருப்போரூர் போலீசாரும், சென்னை போலீசாரும் திட்டமிட்டு சாதாரண உடையில் காரில் சென்றதும், போலீசாரின் காரிலேயே லிப்ட் கேட்டு மாட்டிக் கொண்டதும் கமருதீனுக்கு தெரிந்தது.

Related Stories:

>