×

கொரோனா வந்தால் காது கேட்பதும் காலி: எச்சரிக்கிறது புதிய ஆய்வு

லண்டன்: கொரோனா வைரஸ் தாக்கினால் கேட்கும் திறனும் பறிபோகும் அபாயம் இருப்பதாக லண்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா வந்தால் பிரச்னை கொரோனாவுடன் முடிந்து விடுவதில்லை. சுவாசிப்பதில் சிரமம், இதயத்தில் சேதம் என்று வேறு மோசமான விளைவுகளையும் உண்டாக்குகிறது என்று ஏற்கனவே மருத்துவர்கள் கூறியிருந்தனர். தற்போது, புதிதாக காது கேளாமையும் நிரந்தரமாக ஏற்படலாம் என்று லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்திலுள்ள ராயல் நேஷனல் மருத்துவமனையில் 45 வயதுள்ள ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சையின்போதே இடது காதில் கேட்கும் திறன் பறிபோனது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறிய ஒரு வாரத்தில் வலது காதும் கேட்காமல் போனது. இதனால், நோயாளியின் காதுப் பகுதியை மருத்துவர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர். ஆனால், காதுக்குள் எந்தவித அழற்சியோ, அடைப்போ காணப்படவில்லை. தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா வைரஸ் காரணமாக கேட்கும்திறன் பறிபோயிருக்கலாம் என்று கண்டுகொண்டனர். இது பற்றி மருத்துவர்கள் கூறியதாவது: கொரோனா பரவிய பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில், கொரோனா நோயாளி ஒருவருக்கு காது கேளாமை ஏற்பட்டது. அப்போது, அதை யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது மீண்டும் அதே பிரச்னை ஏற்பட்டுள்ளதை நேரடியாகக் கண்டுள்ளோம். எனவே, கொரோனாவுக்கும் காது கேளாமைக்கும் இருக்கும் தொடர்பு பற்றி இனி நாம் சிந்திக்க வேண்டும்.

கொரோனா வைரசானது நுரையீரலின் மேற்பகுதியில் இரண்டு அடுக்கு செல்களை உருவாக்கி அழற்சியை ஏற்படுத்துகிறது. அதேபோல், காதின் நடுப்பகுதியிலும் இரண்டு அடுக்கு செல்களை ஏற்படுத்தி மூடுகிறது. இது முக்கிய காரணமாக இருக்கலாம். சிகிச்சையின்போது கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மருந்து காரணமாகவும் காது கேளாமை ஏற்படலாம். கொரோனா சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு காது கேட்கும் திறனையும் மருத்துவர்கள் இனி கூடுதலாக கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு, பலி விவரங்கள் வருமாறு:
* புதிதாக 63,509 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 லட்சத்து 39 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 730 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால், மொத்த பலி 1 லட்சத்து 10 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றினால் பாதிக்கப்பட்ட 63 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர்.

* 9 கோடி பேருக்கு பரிசோதனை
இந்தியாவில் இதுவரை 9 கோடியே 90 ஆயிரத்து 122 அதிகமானோருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில், “தொடர்ச்சியாக அதிகளவில் பரிசோதனைகள் நடத்துவது, கொரோனா பரவலை குறைப்பதற்கு வழிவகுத்துள்ளது. 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு, தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது.

Tags : Deafness when the corona arrives: New study warns
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...