×

பள்ளிக்கல்வியை வலுப்படுத்தும் ஸ்டார்ஸ் திட்டத்துக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சரவை அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கையின் கீழ், பள்ளிக் கல்வி முறையை வலுப்படுத்த ஸ்டார்ஸ் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தேசிய கல்விக் கொள்கையின் கீழ், பள்ளிக் கல்வியை வலுப்படுத்தும் வகையில் புதிய கற்பித்தல் முறையை அமல்படுத்தும் ஸ்டார்ஸ் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலங்களுக்கான கற்றல்-கற்பித்தல் மற்றும் அதன் முடிவுகளை வலுப்படுத்தல் (ஸ்டார்ஸ்) திட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு ரூ.5,718 கோடி செலவிடப்படும். இத்திட்டத்தின் நோக்கம், இளம் வயது மாணவர்கள் வெறுமனே மனப்பாடம் செய்து படிப்பதற்கு பதிலாக, பாடங்களை புரிந்து கொண்டு கற்றுக் கொள்ளும் புதிய கல்வி முறையை கொண்டு வருவதாகும். திறனை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்படி பள்ளித் தேர்வுகள் மேம்படுத்தப்படும். இத்திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களிலும், பின்னர் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், குஜராத், தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* விவசாயிகளுடன் பேச அரசு தயாராக உள்ளது
வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்காதது குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘வேளாண் சட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் ஏற்கனவே ஒருமுறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகளை நேரில் சந்தித்து பேசி வருகின்றனர். இன்னும் ஆலோசனை வேண்டுமென்றாலும் அதற்கும் அரசு தயாராக இருக்கிறது. ஆனால், இன்று அமைச்சர் தோமருக்கு வேறு அலுவல் இருந்ததால் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை. இல்லாவிட்டால் நிச்சயம் பங்கேற்றிருப்பார். அதில் எந்த பிரச்னையும் இல்லை,’’ என்றார்.

* லடாக், காஷ்மீருக்கு ரூ.520 கோடி சிறப்பு நிதி
தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் ரூ.520 கோடி சிறப்பு நிதி ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டமானது, கிராமப்புறங்களில் ஏழ்மையை ஒழிக்க, சுய உதவிக்குழுக்களுக்கு வாழ்வாதார வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர கொண்டு வந்ததாகும். இதனை காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டு சேர்க்கும் வகையில் தற்போது நிதி வழங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரு யூனியன் பிரதேசங்களிலும் 10.58 லட்சம் பெண்கள் பயனடைவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags : Strengthen School Education: Federal Cabinet Announcement , Approval of the Stars Project to Strengthen School Education: Federal Cabinet Announcement
× RELATED தேர்தலின்போது ‘டீப் பேக்’...