×

தனியார் பரிசோதனை மையத்தில் 44 பாசிட்டிவ் முடிவுகள் கொரோனா சோதனையில் தவறான தகவல்கள்: பெரிய அளவில் சிக்கல் ஏற்படும்; மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகிக்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகத்தில்தான் அதிகம் கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 191 உள்ளன. இவற்றில் 66 அரசு மருத்துவமனைகளில் உள்ள பரிசோதனை மையங்களாகும். 125 தனியார் மையங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மையங்களில் கொரோனா பரிசோதனைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் சோதனை மையங்களில் தவறான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அந்த வகையில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி லேப்பில் நடந்த கொரோனா பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக முடிவுகள் வந்துள்ளன. இந்த பரிசோதனையை ஆய்வு செய்தபோது இவை தவறான முடிவுகள் என்று தெரியவந்தது. இதையடுத்து, அந்த லேப்புக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் பலருக்கு, இதுபோன்ற தவறான முடிவுகள் தரப்பட்டதால் அவர்கள் மன தளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஒவ்வொரு தனியார் சோதனை மையத்திற்கும் தேசிய பரிசோதனை அங்கீகார மையம் கொரோனா பரிசோதனை நடத்த அங்கீகாரம் தந்துள்ளது.

இந்த மையங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டும். அந்த மாதிரிகளை ஒரு மாதத்திற்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழிகாட்டு முறைகளை பெரும்பாலான தனியார் பரிசோதனை மையங்கள் கடைபிடிப்பதில்லை. மற்ற சிறிய லேப்களில் இருந்து வரும் மாதிரிகளை வாங்கி சோதனை செய்து மொத்தமாக முடிவு அறிவிக்கிறார்கள். இதுகுறித்து வந்த தகவல்களின் அடிப்படையில் கடந்த 6ம் தேதி ஆர்த்தி லேபில் சோதனை நடத்தியதில் அங்கு பரிசோதனை செய்யப்பட்ட 44 பேருக்கு தவறாக பாசிட்டிவ் என்று முடிவு தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த லேப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் (சுகாதாரம்) தெரிவித்துள்ளார். இந்த பரிசோதனை மையங்களில் தரப்படும் முடிவுகள் ஆன்லைன் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தப்படுவதால் நேரடியாக ஆய்வு செய்யப்படுவதில்லை என்று பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் வி.ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நேரடியாக விசாரணை நடத்துவது எல்லா நேரங்களிலும் முடியாத காரியம். ஆனால், கண்காணிக்க முடியும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

ஆய்வில் தமிழகம் முழுவதும் தனியார் பரிசோதனை மையங்கள் எடுக்கும் சோதனையில் 4 சதவீதம் தவறான முடிவுகளாக உள்ளன. மாதிரிகளை எடுக்கும்போது சுகாதாரமான முறையை பல பரிசோதனை மையங்கள் கடைபிடிப்பதில்லை. சில பரிசோதனை மையங்கள் தரமற்ற கொரோனா பரிசோதனை கிட்டுகளை பயன்படுத்துவதும் தவறான முடிவுகள் வர காரணமாக உள்ளன என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தவறான முடிவுகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசு முக்கிய கவனம் செலுத்தாவிட்டால் பெரிய அளவில் சிக்கல் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் தனியார் பரிசோதனை மையங்கள் எடுக்கும் சோதனையில் 4% தவறான முடிவுகளாக உள்ளன.

Tags : testing center ,experts , 44 positive results at private testing center Misinformation in corona test: Large-scale problem; Medical experts warn
× RELATED விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு