×

தனி விமானத்தில் மாலத்தீவுக்கு ஓபிஎஸ் மகன் உல்லாச பயணம்: நண்பர்கள் 4 பேர் உடன் சென்றனர்

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தனி விமானத்தில் நண்பர்களுடன் மாலத்தீவுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளார். கொரோனா காலத்தில் மக்கள் அவதிப்படும் நேரத்தில் அவர் நண்பர்களுடன் பயணம் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து கடந்த 2 மாதமாக மோதல் இருந்து வந்தது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் கூட்டம், செயற்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், வழிகாட்டு குழுதான் முதலில் அமைக்க வேண்டும். அந்தக் குழுவுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். அந்தக் குழுதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று கூறினார். இதனால் கட்சிக்குள் மோதல் எழுந்தது. தன்னை மீறி கட்சிக்குள் தீர்மானம் கொண்டு வந்தால், கூட்டத்தில் இருந்து வெளியேறவும், கட்சியை உடைக்கவும் அவர் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுத்தார். இதனால் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டது. பின்னர் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சென்னையில் இருந்தபடி தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த ஆலோசனையின்போது அவரது மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத்தும் பங்கேற்றார். வழிகாட்டு குழுவில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 5 பேர் சேர்க்கப்பட்டனர். அதில் இடம்பெற்றிருந்த விருதுநகர் பாலகங்கா, பழனி சுப்புரத்தினம் ஆகியோரது பெயரை மாற்றிவிட்டு, தன்னுடைய ஆதரவாளரான மதுரை கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மாணிக்கம் ஆகியோரை பட்டியலில் ரவீந்திரநாத் சேர்க்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

அதிமுகவின் மோதல் முடிந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் சரவணன் பழனியப்பன், விஜயகுமாரன், விஜயானந்த் விநாயகமூர்த்தி, ஆறுமுக நயினார் ஆகிய 4 பேரும் சென்றுள்ளனர். கொரோனா காலம் என்பதால் கடந்த 6 மாதமாக வெளிநாட்டுக்கு விமானம் இயக்கப்படவில்லை. வெளிநாட்டில் இருந்தும் நமது நாட்டுக்கு விமானம் இயக்கப்படவில்லை. ஆனால் வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட நமது நாட்டைச் சேர்ந்தவர்களுக்காக வந்தே பாரத் விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. வர்த்தகத்திற்கான பயணிகள் விமானங்கள் வெளிநாட்டுக்கு இயக்கப்படவில்லை.

இதனால் தனது சொந்த பணத்தில், தனி விமானத்தை புக் செய்த ரவீந்திரநாத் நண்பர்களுடன் உல்லாச பயணமாக மாலத்தீவுக்கு சென்றார். அங்கு கடந்த 4 நாட்களாக பொழுதை கழித்து வருகிறார். இதுகுறித்து அவரது நண்பர்கள் கூறும்போது, ‘‘அதிமுகவில் மோதல் எழுந்ததால், அதை சரி செய்ய அப்பாவுக்கு உதவியாக ரவீந்திரநாத் இருந்தார். சசிகலாவை விட்டு ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியபோது, ரவீந்திரநாத்குமார்தான் ஒவ்வொரு எம்எல்ஏவாக பேசி, தன்னுடைய அப்பா அணிக்கு அழைத்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது அவர் எம்எல்ஏக்களுடன் பேரம் பேசிய ஆடியோக்களும் வெளியாகின. அதேபோலத்தான் இப்போதும் அப்பாவுக்காக சில வேலைகளை அவர் செய்தார். அந்தப் பணிகள் நல்லபடியாக முடிந்து விட்டதால், ஓய்வுக்காக மாலத்தீவுக்குச் சென்றுள்ளார்’’ என்றனர்.

மாலத்தீவு இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை தீவு. கடலுக்குள் ரிசார்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் வருவார்கள். சொர்க்கபூமியாக விளங்கும் மாலத்தீவை விட்டுச் செல்ல யாருக்கும் மனசே வராது. இரவு கிளப்புகள், கேளிக்கை விடுதிகள், மசாஜ் சென்டர்கள் என்று பொழுது போக்கு அம்சங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக இளம் ஆண்களின் சொர்க்க பூமியாக மாலத்தீவு விளங்கும். அங்கு பொழுதை கழிப்பதற்காக ரவீந்திரநாத்குமார் சென்றுள்ளார்.

கொரோனாவில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. பொருளாதாரம் அடியோடு படுத்து விட்டது. மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனர். பலர் வேலை இழந்துள்ளனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. புதிய தொழில்கள் தொடங்கப்படவில்லை. இந்த நேரத்தில் அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக கூறுகின்றனர் பொதுமக்கள். பொருளாதாரம் அடியோடு படுத்து விட்டது. மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனர். பலர் வேலை இழந்துள்ளனர். இந்த நேரத்தில் அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக கூறுகின்றனர் பொதுமக்கள்.

Tags : OPS ,son excursion ,Friends ,Maldives , OPS son trip to Maldives on solo flight: Friends went with 4 people
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்