×

இரண்டாவது முறையாக தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு: அரசின் கோரிக்கையை ஏற்று மத்தியஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் க.சண்முகத்தின் பதவிக்காலம் இரண்டாவது முறையாக மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019 ஜூன் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை செயலாளராக தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகத்தையே தலைமை செயலாளராக நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். கடந்த 2019 ஜூலை 1ம் தேதி சண்முகம் தலைமை செயலாளராக பதவியேற்றார். இவரை விட மூத்த 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலினையில் இருந்தும் நிதித்துறையில் நீண்டகாலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டதால் சண்முகத்துக்கு தலைமை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால், கொரோனா தொற்று காலம் என்பதால், புதிய தலைமை செயலாளரை நியமிப்பதற்கு பதிலாக, அவரது பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியிருந்தது. இதையேற்று, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 3 மாதங்களுக்கு பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.

இந்நிலையில் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது அடுத்த வருடம் 2021 ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் நலத்துறை சார்பு செயலாளர் தமிழக அரசுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி கடிதம் எழுதியிருந்தது. இதையேற்று தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Shanmugam ,Government ,Central Government , Second term extension of Chief Secretary Shanmugam's term for another 3 months: Central Government notification accepting Government request
× RELATED சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி...