×

உபி.யில் தொடரும் அட்டூழியம் 15 வயது தாழ்த்தப்பட்ட சிறுமி 3 பேர் கும்பலால் பலாத்காரம்: புகாரை போலீஸ் ஏற்காததால் தூக்கிட்டு தற்கொலை

சித்ரகூட்: உத்தர பிரதேசத்தில் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது தாழ்த்தப்பட்ட சிறுமி, போலீசார் தனது புகாரை ஏற்க மறுத்ததால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம், ஹத்ராசில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண், 4 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதால் இறந்தார். இதுபோல் இம்மாநிலத்தில் அடுத்தடுத்து பல தாழ்த்தப்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கிறது.

இந்நிலையில், சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள மணிக்பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது தாழ்த்தப்பட்ட சிறுமி, கடந்த 8ம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பலால், கை, கால்களை கட்டிப் போட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான புகாரை போலீசார் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், பாலியல் பலாத்காரம் தொடர்பாக சிறுமி உட்பட யாரும் புகார் கொடுக்கவில்லை என போலீசார் மறுத்தனர். சிறுமியின் தந்தை அளித்த புதிய புகாரின் அடிப்படையில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மகன் கிஷான் உபாத்யாய், நண்பர்கள் ஆஷிஷ், சதீஷ் ஆகியோர் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

* ஹத்ராஸ் குடும்பத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்ட ஹத்ராஸ் இளம்பெண் சம்பந்தப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘இளம்பெண்ணின் குடும்பத்துக்கும், சாட்சிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படியும், அது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யும்படியும் உத்தர பிரதேச போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரப் பிரதேச அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் சாட்சிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

* 2 போலீசார் சஸ்பெண்ட்
சித்ரகூட் மாவட்ட எஸ்பி அன்கிட் மிட்டல் கூறுகையில், ``புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கார்வி காவல் நிலைய அதிகாரி ஜெய்சங்கர் சிங், உதவி ஆய்வாளர் அனில் சாகு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், குடும்பத்தினரின் சம்மதத்துடன் சிறுமியின் சடலம் நேற்று தகனம் செய்யப்பட்டது,’’ என்றார்.

Tags : girl gang ,Suicide ,UP , 15-year-old girl gang-raped by 3 in UP: Suicide by hanging after police did not accept complaint
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...