×

கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராக்கெட் ஏவும் பணி விரைவில் தொடங்கும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

திருவனந்தபுரம்: ‘கொரோனா பரவலை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராக்கெட் ஏவும் பணிகள் விரைவில் தொடங்கும்,’ என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் கூறினார். கொரோனா  பரவலை தொடர்ந்து விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் பணிகளை கடந்த பல மாதங்களாக இஸ்ரோ நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி மாநாட்டை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மைய தலைவர்கள், பத்திரிகையாளர்களுடன், இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியது: கொரோனா பரவலை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராக்கெட் ஏவும் பணிகள்  விரைவில் தொடங்கும்.

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டில் ரிசாட்-2, பிஆர்-2 செயற்கைக்கோள்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஏவப்படும். இத்துடன் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் ஏவப்படும். வரும் 2022 ஆகஸ்டில் விண்வெளிக்கு மனிதர்கள் செல்லும், ‘ககன்யான்’ திட்டத்தில் சற்று தாமதம் ஏற்படலாம். இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்துக்கு ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் உதவுகின்றன. விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக 59 நாடுகளுடன் 250 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நானோ செயற்கைக்கோள்கள் தயாரிக்க 23 நாடுகளை சேர்ந்த 60 பேருக்கு இஸ்ரோ பயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* 70 விஞ்ஞானிகளுக்கு தொற்று
இஸ்ரோவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மையங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரிந்து வரும் 70க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Tags : Rocket launch ,Shivan ,Corona ,ISRO , Rocket launch by Corona to begin soon: ISRO chief Shivan
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...