சவாலுக்கு தயாராக இருக்கிறோம்... வார்னர் உறுதி

துபாய்: இனி வரும் நாட்களில் புள்ளிப் பட்டியலில் முன்னணியில் உள்ள அணிகளை எதிர்கொள்ள உள்ளோம். அந்த சவாலுக்கு நானும் சக வீரர்களும் தயாராகவே இருக்கிறோம் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ஐதராபாத் - சென்னை இடையிலான போட்டியில் சென்னை 20 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. வாட்சன் 42, ராயுடு 41, சாம் 31 ரன் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் நடராஜன், சந்தீப், கலீல் தலா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 8விக்கெட் இழந்து 147 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேன் வில்லியம்சன் மட்டும் அதிரடியாக ஆடி 57 ரன் குவித்தார். சென்னையின் பிராவோ, கர்ண் தலா 2, சாம், ஜடேஜா, ஷர்துல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்த ஆட்டத்திற்கு பிறகு பேசிய ஐதராபாத் கேப்டன் வார்னர், ‘பிட்ச் மெதுவாக இருந்தது. அதனால் எங்களுக்கு இன்னும் ஒரு பேட்ஸ்மேன் தேவை என்று நினைக்கிறேன். வெற்றிக்காக முழுமையாக முயற்சித்தோம். இலக்கு பெரிதாக இருக்கும்போது அது எளிதல்ல. நாங்கள் மீண்டும் உட்கார்ந்து, மேம்படுத்த வேண்டிய பகுதிகளை திட்டமிட வேண்டும். மேலும் 160 ரன் என்பது சரியான இலக்கு. ஆனால் அதற்கு மேல் என்றால் எப்போதும் சிரமம்தான். அணியில் 6,7 பந்து வீச்சாளர்கள் இருப்பது உதவியாக இருந்தது. ஸ்விங்காகும் பந்துகளை எதிர்கொண்டு விளையாடுவது சிரமம். பவர் பிளேயின் போது  விளையாடுவது சவாலாகதான் இருக்கிறது. ஆடுகளங்களுக்கு ஏற்ப, இனி வரும் ஆட்டங்களுக்கு அணியை தேர்வு செய்ய வேண்டும். புள்ளிப்பட்டியலில் நடுவில் இருப்பது இக்கட்டானதே. சிறந்த அணிகளை வெல்வதின் மூலம் முதலிடத்திற்கு முன்னேற முடியும். அடுத்த சில நாட்களில் முன்னணியில் இருக்கும் அணிகளுடன் மோத உள்ளோம்.   எனவே அந்த சவாலுக்கு தயாராக இருக்கிறேன். நான் மட்டுமல்ல மற்றவர்களும் தயாராக இருக்கிறார்கள்’ என்றார்.

Related Stories:

>