தவான், ஷ்ரேயாஸ் அரை சதம் விளாசல் ராஜஸ்தான் ராயல்சுக்கு 162 ரன் இலக்கு

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 162 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் ஹர்ஷல் படேலுக்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டெல்லி தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பிரித்வி ‘தங்க முட்டை’ போட்டு பெவிலியன் திரும்ப, கேப்பிடல்சுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து தவானுடன் அஜிங்க்யா ரகானே இணைந்தார். ரகானே 2 ரன் மட்டுமே எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் உத்தப்பா வசம் பிடிபட, டெல்லி 2.3 ஓவரில் 10 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து மேலும் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், தவான் - கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். 30 பந்தில் அரை சதம் அடித்த தவான் 57 ரன் (33 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கோபால் பந்துவீச்சில் தியாகியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஷ்ரேயாஸ் - ஸ்டாய்னிஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 53 ரன் (43 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி தியாகி பந்துவீச்சில் ஆர்ச்சர் வசம் பிடிபட்டார். ஸ்டாய்னிஸ் 18 ரன் எடுத்து ஆர்ச்சர் பந்துவீச்சில் வெளியேற, அலெக்ஸ் கேரி 14 ரன், அக்சர் படேல் 7 ரன் எடுத்து உனத்கட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. அஷ்வின் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆர்ச்சர் 4 ஓவரில் 19 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். உனத்கட் 2, தியாகி, கோபால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. அதிரடி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Related Stories:

>