×

ஒரேநாள் மழையால் வெள்ளக்காடான தெலங்கானா ஐதராபாத்தில் சுவர் இடிந்து 11 பேர் பலி: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்; மழைநீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு

திருமலை: தெலங்கானாவில் நேற்று முன்தினம் முதல் பெய்த கனமழையால், 17 மாவட்டங்கள் வெள்ளக்காடானது. வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஐதராபாத்தில் ராட்சத பாறை உருண்டு வீடுகள் இடிந்ததால், 11 பேர் பரிதாபமாக இறந்தனர். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆந்திர வடக்குப் பகுதி மற்றும் தெலங்கானா மாநிலத்தில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த சூறாவளி வீசியது. இதனால், விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தை சேர்ந்த சரக்கு கப்பல், நங்கூரத்தை அறுத்துக்கொண்டு கரை ஒதுங்கியது. இதிலிருந்த 15 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் தெலங்கானாவில் கனமழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய நேற்றும் 2வது நாளாக மழை பெய்தது. பலத்த மழையால் ஐதராபாத், அடிலாபாத், கரீம் நகர், கம்மம் மற்றும் நிஜாமாபாத் உள்ளிட்ட 17 மாவட்டங்களும் வெள்ளக்காடானது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தெருக்களில் நிறுத்தப்பட்டு இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

ஐதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் உள்ள முகமதியான் ஹில்ஸ் பகுதியில் உள்ள 10 வீடுகள் கொண்ட காம்பவுண்ட் சுவர் மீது ராட்சத பாறை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 மாத கைக்குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், மாநிலத்தில் ஆங்காங்கே வீடுகள் இடிந்ததில் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல இடங்களில் வெள்ளத்தால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.

இதனால், மாற்று இடத்திற்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவின் 17 மாவட்டங்களிலும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமாயின. 2வது நாளாக கனமழை தொடர்வதால் மீட்பு பணி மேற்கொள்ள முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. இதற்கிடையே, மீட்பு பணியில் தீவிரம் காட்ட அரசு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. பஸ்கள் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

* 30 சென்டிமீட்டர் மழை
நேற்று முன்தினம் பெய்த மழையால், ஐதராபாத் வரலாற்றில் இதுவரை இ்ல்லாத வகையில் முதல்முறையாக 30 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. கடந்த 2000ம் ஆண்டில் இங்கு 20 சென்டி மீட்டர் மழை பதிவானது. இதுவரை இதுவே அதிகபட்ச மழை பதிவாக இருந்து வந்தது.

* பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை
தொடர் கனமழை காரணமாக, தெலங்கானா மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக இருக்கிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, நேற்றும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* பிரதமர் வாக்குறுதி
கடந்த 48 மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் ஆந்திராவில் 10, தெலங்கானாவில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர்கள் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இரண்டு மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.

Tags : Telangana Hyderabad , 11 killed as wall collapses in flood-hit Telangana, Hyderabad: More than 50 injured; People suffer due to infiltration of rainwater
× RELATED தெலங்கானாவில் விரைவில் அரசியல்...