×

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவலம் மலைபோல் குவிந்த மருத்துவ கழிவுகளால் கொரோனா தொற்று பரவும் அபாயம்

* குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
* தரம் பிரித்து தராததால் அகற்றவில்லை என நகராட்சி விளக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மலைபோல் குவிந்த மருத்துவ கழிவுகளால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இங்கு குவிந்துள்ள குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மாவட்ட அந்தஸ்து மற்றும் தேசிய தரச்சான்றிதழ் பெற்ற பெரிய மருத்துவமனையாகும். இங்கு நாளொன்றுக்கு 2,500பேர் வெளி நோயாளிகளாகவும், 800பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் திருப்பத்தூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பிரசவத்திற்காக பெண்களும், கொரோனா தனிமை வார்டில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் சுமார் 800 நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு அதன்மூலம் ஏற்படும் மருத்துவ கழிவுகளை நாள்தோறும் நகராட்சி மூலம் அகற்றப்பட வேண்டும். ஆனால் குப்பைகள் அகற்றப்படாமல் மருத்துவமனை நுழைவாயில் பகுதியிலேயே மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.  

மேலும் குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தின் அருகே பச்சிளம் குழந்தைகள் வார்டு உள்ளிட்ட பல்வேறு வார்டுகள் அருகருகே உள்ளன. குவிந்துள்ள குப்பைக் கழிவுகளால் துர்நாற்றமும், கொசுக்களும் உற்பத்தியாகி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளுக்கு உயிருக்கு உலை வைக்கும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் உறவினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அணிந்த கவச உடைகளும் குவிந்துள்ளது. குப்பைகள் அகற்றாதது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 2016ம் ஆண்டு மருத்துவ மேலாண்மை திட்டத்தின் கீழ் ரத்தம் படிந்த கழிவு உள்ளிட்ட கழிவுகளை மருத்துவமனை நிர்வாகம் தரம்பிரித்து மஞ்சள் நிற பையில் வழங்க வேண்டும்.

நோயாளிகள் பயன்படுத்தும் குப்பைகளை நீல நிற பையில் வழங்க வேண்டும் என்பது அரசு ஆணை. ஆனால் இதனை மருத்துவமனை நிர்வாகம் முறையாக பின்பற்றவில்லை.
பலமுறை இதுகுறித்து எடுத்துக்கூறியும் மருத்துவமனை நிர்வாகம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. இதனால் எங்கள் ஊழியர்களுக்கும் நோய் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எங்களால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் குவிந்துள்ள கழிவுகளை உடனே இங்கிருந்து அகற்ற மருத்துவமனை நிர்வாகமும், நகராட்சியும் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள், நோயாளிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirupati Government Hospital , If the medical waste at the government hospital Tirupathur strong outpouring of distress Corona transmitted infection risk
× RELATED திருப்பதி அரசு மருத்துவமனையில்...