×

மக்களின் ரத்தத்தைக் குடிக்கும் வீட்டு வாடகை...

நன்றி குங்குமம்

வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பலவிதமான நெருக்கடிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்தி வருகிறது. இழந்த வேலைவாய்ப்பு பலருக்கு வாழ்வாதாரம் பற்றிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதோடு, வீட்டு வசதி பற்றிய கேள்வியினையும்  உருவாக்கியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வீடுகள், நீர் வசதி, தனி கழிப்பறைகள்… என்று கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைச் சொன்னார்கள். நாமும் தலையசைத்து கேட்டுக்கொண்டோம்.ஆனால், வீட்டு வசதி குறித்து கவனிக்கத் தவறுகிறோம். அதனால்தான் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கால்நடையாகவும், சிலர் ரயில் மூலமாகவும் திரும்பினர். மத்தியதர வர்க்கத்தினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கல்வி பயில வந்தவர்கள்… பல ஆண்டுகள் சென்னையில் இருந்த மக்கள் ஏன் இந்த பொது ஊரடங்கு காலத்தில் இந்நகரத்தில் வசிக்கவில்லை? காரணம், வீடு! “இந்த கொரோனா நேரத்தில் மட்டுமல்ல... எப்பவுமே ‘ரைட்ஸ் டூ ஹவுசிங்’ என்கிற ஒன்று இருக்கத்தான் செய்யுது...’’ என்கிறார் சமூக செயற்பாட்டாளரான அ.தேவநேயன்.“1967ல திமுக ஆட்சிக்கு வந்தப்ப City Improvement Trust, Slum Clearance Board மூலமா நகரின் பல இடங்கள்ல சின்னச் சின்னதா வீடுகள் கட்டிக் கொடுத்தாங்க.

அதேபோல் பேச்சுலர்கள் வாடகைக்குத் தங்கவும் சிஐடி நகர், நந்தனம் போன்ற இடங்கள்ல இடம் ஒதுக்கி கட்டிக் கொடுத்தாங்க. தமிழ் ஸ்காலர்கள், பத்திரிகையாளர்கள், காவலர்கள்னு பலருக்கும் இதேபோல இடம் ஒதுக்கினாங்க. இதுமாதிரியான எந்த முயற்சிகளும் 90களுக்குப் பிறகு நடக்கலை. அரசு செய்யலை. திமுக ஆட்சிக்கு வரும்போதுதான் பொதுமக்களுக்கான வீடுகள் பற்றிய யோசனையே அரசுக்கு வருது...’’ என்ற தேவநேயன், எல்லா நகரங்களும் பெருநிறுவனங்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்குமாகவே இருக்கிறது என்கிறார். ‘‘அதனாலதான் வேலை தேடி எல்லா இடங்கள்ல இருந்தும் நகரங்களுக்கு மக்கள் வர்றாங்க. இதை கவனத்துல வைச்சு தமிழகம் முழுக்க வேலை வாய்ப்புகளுக்கான வழிகளை அரசு ஏற்படுத்தி யிருந்தா இப்படி சென்னைல மட்டும் மக்கள் குவிந்து இப்ப கொரோனா தொற்று காலத்துல தங்கள் ஊருக்கு போகும் நிலை ஏற்பட்டிருக்காது. ஒரு காலத்துல சென்னைல பேச்சுலர்களுக்கு வீடு கிடைக்காது. ஐடி செக்டார் வளர்ச்சிக்குப் பிறகுதான் ஃபேமிலியை விட பேச்சுலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடு தர ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட இந்தக் காலத்துலதான் வீட்டு மனைகளை வாங்கவும் விற்கவும் புரோக்கரா செயல்பட்டவங்க... வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்யும் புரோக்கராவும் மாறினாங்க. அதோட வாடகையைத் தீர்மானிக்கும் சக்திகளா உருவெடுத்தாங்க. ஐடி மாதிரி அதிக சம்பளம் வாங்கறவங்க நாலு பேர் சேர்ந்து ஒரு வீட்ல தங்கினாங்கனா ஆளுக்கு மூணு - நாலு ஆயிரம் வாடகைனு நிர்ணயிச்சாங்க.

நல்ல சம்பளம் வாங்கறவங்களுக்கு நாலாயிரம் வாடகை தர்றது பெரிய விஷயமா தெரியலை. ஆனா, இதே வாடகையை சாதாரண மக்களுக்கும் குடும்பங்களுக்கும் புரோக்கர்கள் நிர்ணயிச்சப்ப கீழ் நடுத்தர- நடுத்தர மக்கள் விழிபிதுங்கினாங்க. குறிப்பா அமைப்பு சாரா தொழிலாளர்களா உருவெடுத்த கூட்டம் வீட்டு வாடகையால அல்லல்பட்டாங்க. 90க்குப் பிறகு மிகப்பெரிய பணம் புழங்கும் துறையா வீட்டு வாடகை மாறிச்சு. இது அரசுக்கும் தெரியும். ஆனாலும் வாடகையால பாதிக்கப்படறவங்க அது சார்ந்து புகார் அளிக்க சட்டங்கள் எதையும் வகுக்கல. எல்லாமே வெறும் ஆணைகளாதான் இருக்கு...’’ என்று வருத்தப்படும் தேவநேயன், இக்காலங்களில் வீடு கட்டத் தொடங்குபவர்களும் எந்த நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கவில்லை என்கிறார். ‘‘ஜன்னல், படிக்கட்டு, துணி காயப்போடுவதற்கான வசதிகள்னு அடிப்படை விஷயங்களை நிறைவேற்றாத நிறைய வீடுகள் சென்னைல கட்டப்பட்டிருக்கு. இதன் கூடவே தண்ணீர் வசதி, ஈபி பில், கழிவுநீர் வெளியேற்றம்னு பலதை பட்டியலிடலாம். இவ்வளவு குறைகளுடன் வீட்டைக் கட்டி வாடகையை மட்டும் அதிகமா வசூலிக்கும் போக்கு அதிகரிச்சிருக்கு. ஓர் உண்மை தெரியுமா..? உலகத்துலயே முறைவாசல்னு ஒரு தொகையை வாடகைக்கு இருக்கறவங்களிடம் வசூலிக்கும் வழக்கம் சென்னைலதான் இருக்கு! இப்படி பல பிரச்னைகள் நிரம்பி வழியறதாலதான் முட்டு சந்துகளுக்குள்ள கிருமிநாசினி தெளிக்க முடியாம இப்ப தவிக்கறோம். தீயணைப்பு வண்டிங்க நுழைய முடியாத அளவுக்கு ஆயிரக்கணக்கான தெருக்கள் சென்னைல இருக்கு. இந்தளவுக்கு ஒழுங்கீனமா வீடுகளைக் கட்டியிருக்காங்க. இதை அரசு தட்டிக் கேட்கவும் இல்லை... ஒழுங்குபடுத்தவும் இல்லை.

ஊரடங்கு அறிவிச்சதும் சென்னையை விட்டு வெளியேறின லட்சக்கணக்கான மக்கள் யார்னு நினைக்கிறீங்க..? வீட்டு வாடகை, ஈபி பில், முறைவாசல் கட்டணம் எல்லாம் செலுத்த முடியாதவங்கதான். இப்படி வெளியேறின மக்கள்ல எத்தனை பேர் திரும்பி சென்னை வருவாங்கனு தெரியலை. எத்தனை பேர் வந்தாலும்... ஏன், போனவங்க எல்லாரும் திரும்பி வந்தாலும்... இதன்பிறகாவது சென்னைல வாடகையைக் குறைக்கணும். நியாயமான வாடகையை மட்டுமே வசூலிக்கணும். அரசு மனசு வைச்சா உரிய நடவடிக்கை எடுத்து வாடகைக் கொள்ளையைக் கட்டுப்படுத்தலாம். இந்தியாவுக்கே ஹவுஸிங் போர்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினது தமிழகம்தான்... திமுக ஆட்சிதான். அந்தத் திட்டம் மேலும் மேலும் தொடரணும். வீடற்றவர்களுக்கு வீடு கொடுப்பதுதான் உரிமை, ஜனநாயகம். இதுதான் சுதந்திர தேசத்துக்கான அடையாளம். ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு ஹெல்ப்லைன் இருக்கறா மாதிரி வாடகை சம்பந்தமாகவும் ஹெல்ப் லைன் இருக்கணும்.ஊரடங்கு முடிந்து பணி ஒழுங்கு ஏற்படும் வரை வாடகை வசூலிப்பதுல வீட்டு உரிமையாளர்கள் கறாரா இருக்கக் கூடாது. இதையெல்லாம் அரசு தான் கவனிச்சு செய்யணும்...’’ என வேண்டு கோள் வைக்கிறார் தேவநேயன்.

தொகுப்பு: அன்னம் அரசு

Tags : House , House rent for drinking people's blood ...
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...