×

எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஸ்தியை கரைக்க மாட்டோம் : ஹத்ராஸ் திரும்பிய குடும்பத்தினர் தகவல்

லக்னோ,:‘இளம்பெண் பாலியல் பலாத்கார கொலையில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஸ்தியை கரைக்க மாட்டோம்’ என்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நேற்றிரவு ஹத்ராஸ் திரும்பிய பின் கூறினர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இறந்த பெண்ணின் சடலத்தை இரவோடு இரவாக காவல்துறை தகனம் செய்தது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பேராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அம்மாநில உயர் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் இளம்பெண்ணின் தாய், தந்தை மற்றும் பெண்ணின் மூன்று சகோதரர்கள் லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மதியம் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் அவர்களை காவல்துறை ஆஜர்படுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை நவ. 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். அப்போது, அனைவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. உயர்நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற பின்னர், ஹத்ராஸ் குடும்பத்தினர் பலத்த பாதுகாப்புடன் நேற்றிரவு தங்களது கிராமத்திற்கு வந்தடைந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘எங்களது விருப்பதிற்கு மாறாக தகனம் செய்யப்பட்டது. எங்களது மகளுக்கு நீதி கிடைக்கும் வரை, அவரது அஸ்தியை கரைக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தோம். இவ்வழக்கை உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும். விசாரணை முடியும் வரை எங்களது குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்றனர்.

Tags : Justice, Asti, Sex, Hadras
× RELATED பட்டாசு நெருப்பு விழுந்ததில் குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்