×

நீலகிரியில் பழுதான தண்ணீர் ஏ.டி.எம்.கள்: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் ஏ.டி.எம்.களில் பெரும்பாலானவைகள் பழுதான  இயங்காத நிலையில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை  விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள்  போன்றவைகளை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலை மற்றும்  நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக,  மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் தண்ணீர் ஏ.டி.எம்.கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டன.

ஆனால், இந்த ஏ.டி.எம்.களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அமைத்ததோடு சரி, அதன்பின் அவைகளை முறையாக  பராமரிக்கப்படவில்லை. ஒரு சில  ஏ.டி.எம்.கள் இயங்கினாலும் அவைகளில் முறையாக தண்ணீர் வருவதில்ைல. ஏ.டி.எம்.களில்  நாம் போடும் பணத்திற்கு அளவை காட்டிலும் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. சில ஏ.டி.எம்.களில் மாசடைந்த தண்ணீர்  வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த தண்ணீர் ஏ.டி.எம்.களை நம்பி செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள்  மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏ.டி.எம்.களையும் முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதுமட்டுமின்றி, நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசம் என்பதால் இதில் வரும் குளிர்ந்த நீரை பருக பொதுமக்கள், சுற்றுலா  பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த ஏ.டி.எம்.களில் சுடுநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்  பங்குகளில் வைக்கப்பட்டுள்ள சுடுநீர் வழங்கும் இயந்திரங்களை போல, இந்த ஏ.டி.எம்.களிலும் சுடுநீர் விநியோகிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Nilgiris: Public , Contaminated water ATMs in the Nilgiris: Public, tourists disappointed
× RELATED நீலகிரியில் கடும் உறைபனி: குளிரால் பொதுமக்கள் அவதி