×

ஊட்டி பூங்காவில் உள்ள மான்களை வனத்தில் விடுவிக்கும் பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி மான் பூங்காவில் கடமான்களை வனப்பகுதிக்குள் விடுவிப்பதற்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து  அதற்கான பணிகளில் வனத்துறையினர் துவக்கியுள்ளனர். ஊட்டி ஏரியின் மறு கரையில் மான் பூங்கா உள்ளது. இப்பூங்கா முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இப்பூங்கா கடந்த 1995ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த பூங்காவில் புள்ளிமான், சாம்பார் வகை மான்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.  இவற்றை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தொடர்ந்து புள்ளி மான்கள் நோய்வாய்பட்ட நிலையில்  அவை முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது இங்கு சாம்பார் டீர் எனப்படும் கடமான்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பூங்காவில் மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள் ஆய்வு  மேற்கொண்டனர். ஆணைய விதிமுறைகள்படி பூங்காவில் மான்கள் வாழ்வதற்கு ஏற்ற தரமான சூழல் இல்லை என  தெரிவித்தனர். இதனால் கடந்த 5 ஆண்டுகளுகாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 2017ம் ஆண்டில்  இங்கு 19 கடமான்கள் இருந்தன. தற்போது உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக இறந்ததால் அவற்றின்  எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது. மத்திய உயிரியல் ஆணையத்தின் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற முடியாத  நிலையில் இங்குள்ள கடமான்களை இடமாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிக்கை வனத்துறை உயர்  அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.

இது மட்டுமின்றி மான்களை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவிக்கலாம் என அனுப்பப்பட்ட அறிக்கையின்  மீதும் முதன்மை வனத்துறை அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்காமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்து இருந்து வந்தனர். இதனால் பூங்காவில் உள்ள மான்களை முதுமலை புலிகள் காப்பக வன ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில்  ஊட்டி மான் பூங்காவில் உள்ள கடமான்களை நீலகிரியில் உள்ள வனப்பகுதியில் விடுவிக்க அனுமதி அளித்து முதன்மை வன  பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடமான்களை இடமாற்றும் நடவடிக்கைகளை முதுமலை புலிகள்  காப்பக நிர்வாகம் துவக்கி உள்ளது.

அனைத்து மான்களையும் ஒரே சமயத்தில் பிடித்து செல்வதை தவிர்த்து ஒவ்வொன்றாக அவற்றை பிடித்து நீலகிரி வன  கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதி அல்லது முக்கூருத்தி தேசிய பூங்காவிற்குள் விடுவிக்கப்பட உள்ளது. மான்களை  காயமின்றி பிடிப்பதற்காக கூண்டு அமைத்து அதற்குள் இழை தழைகளை போட்டு மான்களை பிடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊட்டி மான் பூங்காவில் கடமான்களை ஒவ்வொன்றாக வனத்திற்குள்  விடுவிக்க முதன்மை வன பாதுகாவலர் அனுமதி அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அவற்றை பாதுகாப்பாக பிடித்து நீலகிரி  வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதி அல்லது முக்கூருத்தி தேசிய பூங்காவிற்குள் விடுவிக்கப்பட உள்ளது’’ என்றார்.

Tags : Ooty Park , In Ooty Park Intensity of work to release deer in the forest
× RELATED கோடை சீசனுக்காக மரவியல் பூங்கா தயாராகிறது