×

ஆசனூர் வனப்பகுதியில் சாமி சிலையை வனத்துறையினர் அகற்றியதால் பரபரப்பு: பழங்குடியின மக்கள் போராட்டம்

சத்தியமங்கலம்: ஆசனூர் வனப்பகுதியில் உள்ள பழங்குடியினரின் சாமி சிலையை வனத்துறையினர் அகற்றியதால்,  பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனக்கோட்டத்தில் உள்ள ஆசனூர்  வனச்சரகம் அரேபாளையம் பிரிவு அருகே சாலையோர வனப்பகுதியில் பிசில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.  வனப்பகுதியில் திறந்த வெளியில் அமைந்துள்ள பிசில் மாரியம்மன் கோயிலில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும்  பூஜையில் ஆசனூர், அரேபாளையம், ஓங்கல்வாடி, சென்டர் தொட்டி, பங்களா தொட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த  பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம்.

நேற்று மாலை ஆசனூர் வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள பிசில் மாரியம்மன் சாமி சிலையை அகற்ற முயற்சித்தனர்.   இது குறித்த தகவல் அறிந்த ஆசனூர் மலைப்பகுதி கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று,  ‘‘வனப்பகுதியில் தொன்றுதொட்டு பாரம்பரியமாக நாங்கள் வணங்கி வரும் சாமி சிலையை எதற்காக அகற்றுகிறீர்கள்?’’ என  கேள்வி எழுப்பியபோது, புலிகள் காப்பக வனப்பகுதி என்பதால், கட்டிடம் இல்லாமல் திறந்த வெளியில் இருக்கும் சாமி  சிலைகளை அகற்றுமாறு உத்தரவு உள்ளது. அதனால், சாமி சிலைகளை அகற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மலைகிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன  அலுவலர் கே.வி.ஏ. நாயுடுவிடம் ஆசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி ஜீவபாரதி  உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் இல்லாத திறந்த வெளியில் மற்றும் மரத்தடியில் அமைந்துள்ள சாமி சிலைகளை  அகற்றுமாறு உத்தரவு வந்துள்ளதால் அகற்றுவதாகவும், வனப்பகுதியில் உள்ள கோயில்களில் சாமி கும்பிடுவதற்கு  முறையாக வனத்துறையிடம் சமுதாய உரிமை அனுமதி வாங்க வேண்டும் என்றும், அனுமதி வாங்கிய கோயில்களுக்கு மட்டுமே  சம்பந்தப்பட்ட பொதுமக்கள் சென்று சாமி கும்பிட அனுமதி உண்டு என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.  இதையடுத்து சாமி சிலையை அகற்றி மாவட்ட வன அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டது.

Tags : foresters ,forest ,Sami ,Asansol ,struggle , In the Asanur forest Excitement over deforestation of Sami statue: Indigenous people's struggle
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ