×

பயணிகள் நிழற்கூடத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைப்பு : அதிகாரிகள் நடவடிக்கை

ஆரணி: ஆரணி அருகே பயணிகள் நிழற்கூடத்தில் ஆதரவற்று தங்கியிருந்த மூதாட்டியை ஊரக வளர்ச்சித்துறை  அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் பயன்பாடின்றி உள்ள பயணிகள் நிழற்கூடத்தில், கடந்த 3  மாதங்களாக 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்தார். உணவு மற்றும் உடுத்த  உடையில்லாமல் அவதிப்பட்டு வந்ததையறிந்த அப்பகுதி மக்கள் அவருக்கு தினமும் உணவு, தண்ணீர், டீ போன்றவற்றை  கொடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த மூதாட்டியின் நிலை குறித்து, இரும்பேடு ஊராட்சி தலைவர் தரணி வெங்கட்ராமன் பிடிஓ மூர்த்திக்கு நேற்று  தகவல் தெரிவித்தார். பின்னர் பிடிஓ, ஆரணிக்கு வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் ஜெயசுதாவிடம் மூதாட்டி குறித்து  தெரிவித்தார்.

இதையடுத்து, திட்ட இயக்குனர் ஜெயசுதா, பிடிஓக்கள் மூர்த்தி, வெங்கடேசன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை  அதிகாரிகள், அங்கு  சென்று மூதாட்டிக்கு உணவு, பழம், சேலை, போர்வை உள்ளிட்டவைகளை  வழங்கினர். தொடர்ந்து, திட்ட இயக்குனர்  திருவண்ணாமலை சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) கந்தன் மற்றும் அதிகாரிகள், கிராம விரிவு அலுவலர் ஞானம்மாள்   ஆகியோர் மூதாட்டியிடம் வந்து விசாரித்தனர். அதில், அவரது பெயர் ருக்மணி(70), ஆரணி காந்தி நகரை சேர்ந்தவர் என்பதும்,  குடும்பத்தினர் அனைவரும் இறந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அவரது உறவினர்கள் ஆட்டோவில் அழைத்து  வந்து, விட்டு சென்றது தெரியவந்தது.இதையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கந்தன் தலைமையிலான அதிகாரிகள், மூதாட்டி ருக்மணியை மீட்டு  செய்யாறில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்.



Tags : lady ,passenger gallery , Handing over to the unsupported old lady who stayed in the passenger gallery : Authorities action
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...