×

கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல் தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் கைது: வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

கயத்தாறு: கயத்தாறு அருகேயுள்ள ஓலைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான  இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு ஆடு மேய்க்கும் தொழிலாளியான சிவசங்கு (60) என்பவருக்கும் கடந்த சில   மாதங்களுக்கு முன்னர் ஆடு திருடு போனது தொடர்பாக விரோதம் உருவானது. இதனிடையே கடந்த 8ம் தேதி திருமங்கலக்குறிச்சி காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்கும் இடத்தில் இருவருக்கும் இடையே  மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதையடுத்து பால்ராஜை ஆடு மேய்க்கும் இடத்தில் வைத்து சிவசங்கு  தனது உறவினர்களின் உதவியோடு தனது காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்து மிரட்டினாராம். அப்போது இதை வீடியோ  எடுத்த அவரின் உறவினர்கள் சிலர், சமூக வலைதளங்களில் பதிவிட்டுனர்.

இது வைரலாக பரவிய நிலையில் இதுகுறித்து கயத்தாறு போலீசில் பால்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் சிவசங்கு, அவரது  மகன்  சங்கிலிப்பாண்டி (19), மகள் உடையம்மாள் (33), உறவினர்களான சண்முகையா மகன்கள்  பெரியமாரி (47), வீரையா (42),  பெரியமாரி மகன் மகேந்திரன்  (20), மற்றும் சங்கிலிப்பாண்டி மகன் மகாராஜன் (24), கருப்பசாமி மகன் அருண்  கார்த்திக் (21) ஆகிய  8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கயத்தாறு போலீசார் வழக்குப்  பதிவு செய்தனர். இதனிடையே எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவை அடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி கலைகதிரவன் தலைமையில் கயத்தாறு  இன்ஸ்பெக்டர் முத்து, எஸ்ஐ அரிக்கண்ணன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர், உடையம்மாள் தவிர மற்ற 7  பேரையும் கைது செய்தனர். இதில் அருண் கார்த்திக் இந்த வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவிட்டு பகிர்ந்தவராவார்.  இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.

அனுமதிக்க முடியாது: எஸ்பி
இச்சம்பவம் குறித்து எஸ்.பி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பால்ராஜை வலுக்கட்டாயமாக காலில் விழ  வைத்து மிரட்டி அதை வீடியோவாக எடுத்துள்ளது அநாகரிகமானது. அத்துடன் சட்டத்துக்குப் புறம்பான இதுபோன்ற  செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8  பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவர்  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது. ஓலைக்குளம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பால்ராஜிக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது’  என்றார். பின்னர் எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி கலைக்கதிரவன் ஆகியோர் பால்ராஜ் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை  நடத்தினர்.

Tags : Conflict over goat issue near Kayathar 7 arrested for threatening worker to fall on foot: Prevention of Torture Act passed
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...