×

திருவாரூர் அருகே 100 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய லாரி சிறைபிடிப்பு: டிரைவர், தொழிலாளர்கள் ஓட்டம்

திருவாரூர்: திருவாரூர் அருகே 100 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் டிரைவர்,  தொழிலாளர்கள் தப்பியோடினர்.தமிழகத்தில் போலி ரேஷன் அட்டைகளை தடுக்கவும், ரேஷன் கடையில் விற்பனையாளர்கள் செய்யும் தவறினை  கண்டுபிடிப்பதற்காகவும் ஸ்மார்ட் கார்டு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஸ்மார்ட் கார்டுகள் மூலமாகவும்  சிறுசிறு தவறுகள் நடைபெற்று வந்ததை முற்றிலும் ஒழிக்கவும், புலம்பெயரும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையிலும்  பயோமெட்ரிக் முறையிலான ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இதுபோன்று எந்த வடிவங்களில் செயல்படுத்தினாலும் தவறுகள் நடைபெறுவதை குறைக்க  முடியாத நிலை இருந்து வருகிறது. திருவாரூர் அருகே கொடிக்கால் பாளையத்தில் இயங்கிவரும் ரேஷன் கடை ஒன்றில் பொது  மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் அரிசியானது சரிவர வழங்கப்படாமல் திருட்டுத்தனமாக இருப்பு வைக்கப்பட்டு,  அந்த அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதற்காக நூறு மூட்டை அரிசியை அந்த கடையில் இருந்து ஒரு லாரி மூலம் நேற்று  ஏற்றப்பட்டுள்ளது.
இதனை கண்ட அப்பகுதி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் லாரியில் அரிசி ஏற்றப்படுவது குறித்து கேள்வி  எழுப்பினர். அப்போது கடை விற்பனையாளர் பிரபாகரன் (35) குடோனில் இருந்து வந்த அரிசி சரியில்லை என்பதால் திருப்பி  அனுப்புவதற்காக ஏற்றப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் உஷாரான பொதுமக்கள் அரசு குடோனுக்கு அரிசி  எடுத்து செல்லப்படுகிறது என்றால் அரசு மூலம் ஒப்பந்தம் பெற்ற லாரியில் மட்டுமே அரிசி ஏற்றப்பட வேண்டும்.

அவ்வாறு  இல்லாமல் தனியார் லாரியில், அதுவும் தனியார் தொழிலாளர்களை கொண்டு அரிசி ஏற்றப்படுவது ஏன் என்று மீண்டும் கேள்வி  எழுப்பினர்.இதில் கடை விற்பனையாளர் பிரபாகரன், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த  பொதுமக்கள் அந்த லாரியை சிறைப்பிடித்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம்  நடைபெற்று கொண்டிருக்கும் போதே லாரியில் அரிசியை ஏற்றிய 10 தொழிலாளர்கள் மற்றும் லாரி டிரைவர் முருகன் ஆகியோர்  அங்கிருந்து தப்பி ஓடினர்.

தகவல் அறிந்த திருவாரூர் வட்ட வழங்கல் அலுவலர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, 100  மூட்டை அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் உணவு தடுப்பு  பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியில் ஏற்றப்பட்ட அரிசி எந்த ஊருக்கு செல்கிறது, எவ்வளவு தொகைக்கு விற்பனை  செய்யப்பட்டது, யாருக்கு செல்கிறது என்ற விவரம் குறித்து ரேஷன் கடை விற்பனையாளர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : Thiruvarur , 100 bundles of ration rice near Thiruvarur Capture of hijacked truck: Driver, workers flow
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு