×

சேலத்தில் அண்ணன் இறந்து விட்டதாக கருதி உயிரோடு பிரீசர் பாக்சில் வைத்த தம்பி மீது போலீசார் வழக்குப் பதிவு

சேலம், : சேலத்தில் அண்ணன் இறந்து விட்டதாக கருதி உயிரோடு பிரீசர் பாக்சில் வைத்த தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சரவணன் (70). இவரது அண்ணன் பாலசுப்பிரமணியகுமார் (74). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. சரவணன் தனியார் கார் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது அண்ணன், சேலம் பர்ன்அன்கோவில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மாதம் ₹5 ஆயிரம் பென்சன் வருகிறது. இவர்கள், தங்கள்  தங்கை மகள்கள் ஜெயஸ்ரீ (50, வாய்பேச முடியாது), கீதா (48) ஆகியோருடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலசுப்பிரமணியகுமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதை யடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 2 நாட்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் முன்னேற்றம் இல்லாததால், வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் சரவணன், தனது அண்ணன் இறந்துவிட்டதாக நினைத்து, எரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதற்காக, ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள பிரீசர் பாக்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து, உடனடியாக பிரீசர் பாக்ஸ் (குளிர்சாதன பெட்டி) வேண்டும் என கேட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டிற்கு பிரீசர் பாக்சை ஊழியர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் பாக்சில் உடலை வைப்பதற்கு கேட்டபோது, மருத்துவ மனையில் இருந்து உடல் வருகிறது, நீங்கள் பாக்சை வைத்து விட்டு செல்லுங்கள் என சரவணன் கூறிவிட்டார். அதன்படி அவர்கள் சென்று விட்டனர். நேற்று பகல் 2 மணிக்கு ஊழியர்கள் திரும்பி வந்தபோது, பாக்சுக்குள் உடல் இருந்தது. உற்றுப் பார்த்தபோது கை, கால் அசைவு தெரிந்தது. இரவு முழுவதும் குளிரில் அவர் நடுநடுங்கிக் கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த பிரீசர் பாக்ஸ் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உயிரோடு அவரை உள்ளே வைத்தது ஏன்? என கேட்டபோது, அண்ணன் இறந்து விட்டார், அவரது ஆன்மா பிரிகிறது என சரவணன் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சேலத்தில் ஏழைகளுக்கு இலவசமாக பிரீசர் பாக்ஸ் வழங்கி சேவை செய்து வரும் திமுக முன்னாள் கவுன்சிலர் தெய்வ லிங்கத் திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர் விரைந்து வந்தார். உடனடியாக பிரீசர் பாக்சில் இருந்த பாலசுப்பிரமணியகுமாரை வெளியே எடுத்தனர். சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின்பேரில் போலீசார் அங்கு வந்தனர். இவர்கள், வீட்டில் இருந்த சரவணன், ஜெயயிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கீதா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள மருத்துவ மனைக்கு சென்றுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், பாலசுப்பிரமணியகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சரவணன் மீது முரட்டுத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் இயந்திரத்தை கையாண்டு அண்ணனுக்கு காயம் ஏற்படுத்துதல் என 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன் சற்றுமனநலம் பாதிக்கப்பட்டவர்போல இருப்பதால் விசாரணை நடந்து வருகிறது. பாலசுப்பிரமணியகுமாரை, பிரீசர் பாக்ஸ்சில் ஒருவரால் மட்டும் எளிதில் தூக்கி வைத்திருக்க முடியாது. மேலும் இறந்தவர் உடலில் கை, கால்களை கட்டுவதுபோல கட்டி வைத்துள்ளனர். எனவே அவருக்கு உதவியது யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : brother ,Salem , Salem, brother, freezer box, brother
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...