உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி, சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து 3 மாதமாக பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி : பொதுமக்கள் சரமாரி தாக்குதல்

திருமலை,: உடல்நலக்கோளாறை சரி செய்வதாக கூறி 15 வயது சிறுமிக்கு கடந்த 3 மாதமாக தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த போலி மந்திரவாதியை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், பூசல காலனியை சேர்ந்தவர் பிரசாந்த்(42). இவர் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பூஜைகள் நடத்தி, ‘தீராத வியாதிகளை தீர்த்து வைக்கும் மந்திர சக்தி தனக்கு உள்ளது’ என்று அப்பகுதி மக்களிடம் கூறி வந்துள்ளார். இதை நம்பிய சிலர், தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து பரிகார பூஜைகள் செய்துள்ளனர்.

அதன்படி ஆதிலாபாத்தை சேர்ந்த தம்பதி, தங்களுடைய 15 வயது மகளுக்கு பல ஆண்டுகளாக உடல் நல பாதிப்பு உள்ளது. இதை தீர்க்க வேண்டும் என்று மந்திரவாதி பிரசாந்த்திடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘3 மாதம் மந்திரத்துடன் கூடிய சிகிச்சை எடுத்தால் சிறுமிக்கு ஏற்பட்ட உடல் கோளாறுகள் தீர்ந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.அதன்படி அவர்கள், தங்கள் மகளை கடந்த 3 மாதமாக தினமும் பிரசாந்த்திடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரும் தினமும் தனியறையில் அச்சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்.

நேற்று திடீரென சிறுமிக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோர், டாக்டரிடம் அழைத்துச்சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்கள் மகளிடம் கேட்டபோது, ‘மந்திரவாதி கொடுக்கும் தூக்க மாத்திரையை சாப்பிடுவேன். அப்போது அவர் என்னை பலாத்காரம் செய்வார். இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்’ என்று தெரிவித்துள்ளார்.இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று போலி மந்திரவாதி பிரசாந்த்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். செருப்பு, கற்களாலும் தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பி தெருவில் ஓடியபோதும் விடாமல் தாக்கினர்.இதுகுறித்து தகவலறிந்த நிஜாமாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரசாந்த்தை மீட்டனர். மேலும் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories:

>