×

காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தை பாஜவினர் முற்றுகை

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டையில் புகார் கொடுக்க வந்தவரை தரக்குறைவாக பேசி மிரட்டிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டையை சேர்ந்தவர் எஸ்.கே.ஏகநாதன். பாஜவில் ஒன்றிய தலைவராக உள்ளார். அவருக்கும் அதே ஊரை சேர்ந்த விநாயகம் என்பருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏகநாதன் காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றுள்ளார். அப்போது, அவரை சுமார் ஒரு மணி நேரம் காக்க வைத்து எதிர்தரப்பை சேர்ந்த விநாயகம் வந்து புகார் மனு வழங்கிய பின்னர் ஏகாநாதன் புகார் மனுவை போலீசார் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏகநாதன் போலீசாரிடம்  கேள்வி கேட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த போலீசார் தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவலர் அந்தோணி என்பவர் மீது ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று பாஜ மாவட்ட விவசாய பிரிவு பொது செயலாளர் எம்.கருணா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜவினர் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், காவலர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திரனிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து காவலர் மீது ஐஜியிடம் புகார் செய்ய அனைவரும் சென்றனர். அதில், ஒன்றிய பாஜ தலைவர் ஏகநாதன், ஒன்றிய துணைத் தலைவர் பாலன், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags : BJP ,police station ,policeman , BJP besieges police station demanding action against policeman
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்