×

ஹத்ராஸ் இளம்பெண் வழக்கு குற்றம் நடந்த இடத்தில் சிபிஐ குழு விசாரணை

புதுடெல்லி: ஹத்ராஸ் இளம்பெண் பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியது. பலாத்காரம் நடந்த இடத்தை அவரது தாயும், சகோதரரும் அடையாளம் காட்டினர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் கடந்த மாதம் 14ம் தேதி 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, வயல்வெளிக்கு இளம்பெண்ணின் தாயும், சகோதரனும் வந்ததைப் பார்த்த குற்றவாளிகள், அவரை கடுமையாக தாக்கி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பை அடுத்து இந்த வழக்கை உபி போலீசாரிடமிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிஐ நேற்று தனது விசாரணையை தொடங்கியது. சிபிஐ அதிகாரிகள் குழு சம்பவம் நடத்த ஹத்ராசுக்கு நேற்று சென்றனர். அங்கு இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இளம்பெண்ணின் தாய் மற்றும் சகோதரன் சம்பவம் நடத்த இடத்தை அடையாளம் காட்டினர். சம்பவம் நடந்து ஒருமாதம் ஆனநிலையில், அந்த இடத்தில் யாரும் செல்லாதபடி தடுப்பு அமைப்புகள் மாநில போலீசாருக்கு சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் தடவியல் நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு தடயங்கள் குறிப்பு எடுத்துக் கொள்ளப்பட்டன. 2 மணி நேரம் அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் பின்னர், இளம்பெண் சடலம் எரியூட்டப்பட்ட மயானத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அதோடு இளம்பெண்ணின் வீட்டிலும் ஆய்வுகள் செய்யப்பட்டன. சம்பவம் நடந்த போது அங்கு சென்ற இளம்பெண்ணின் சகோதரினிடம் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘சிபிஐ விசாரணை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. விசாரணையை அவர்கள் இப்போதுதான் தொடங்கி இருக்கிறார்கள். நடந்த சம்பவத்தை மீண்டும் ஒருமுறை கூறச் சொன்னார்கள். எங்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது’’ என்றனர். ஹத்ராஸ் சம்பவத்தில் இளம்பெண்ணின் குடும்பத்தினரே அவரை அடித்து படுகாயமடையச் செய்ததாக சில தகவல்கள் கூறப்படும் நிலையில், இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : CBI ,team , CBI team investigates Hadras teen case
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...