×

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையை செயல்படுத்தாத பிளிப்கார்ட்டை மூட நோட்டீஸ்

புதுடெல்லி: திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தாத பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் -1986, பிரிவு 5ன் படி  விளக்கம் கேட்டும், மூடுவதற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தச் சட்ட விதிகள் 2018ன் படி, சட்ட விதிகளை பின்பற்றாத இந்த நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவை இந்த வாரியத்தில் பதிவு செய்யப்படாததோடு, நோட்டீசுக்கு விளக்கம் தரவில்லை.

இந்துஸ்தான் கோககோலா பீவரேஜ், பெப்சிகோ இந்தியா ஹோல்டிங்ஸ், நவ்ரிஷ் கோ பீவரேஜஸ், பிஸ்லரி இன்டர்நேஷனல் ஆகிய 4 நிறுவனங்களும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்துள்ளன. அமேசான் செல்லர் சர்வீசஸ், கோககோலா இந்தியா, பார்லே அக்ரோ, ஐஆர்சிடிசி ஆகியவை, பிளாஸ்டிக் கழிவு மேலான்மை விதிகளின்படி பதிவு செய்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பாய உத்தரவுப்படி, மேற்கண்டநிறுவனங்களில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிபுணர்கள் அடங்கிய ஏஜென்சிகள் மூலம் இந்த தணிக்கை நடத்தப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், காலாண்டு இடைவெளியில் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Flipkart , Notice to close Flipkart that does not implement plastic waste management
× RELATED ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல்...