கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா

சென்னை: அதிமுக 49வது ஆண்டு தொடக்கவிழா வரும் 17ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17.10.2020 சனிக்கிழமை 49வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 10.30 மணிக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமை கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளனர்.     

மாவட்டச் செயலாளர்கள் அனைவரும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்டம், வார்டு, கிளை அளவிலான அனைத்துப் பகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகளை செய்து 49வது ஆண்டு தொடக்க நாளான 17.10.2020 அன்று ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கும், அவர்களது படங்களுக்கும் மாலை அணிவித்து, கட்சி கொடிக் கம்பங்களுக்கு புதுவண்ணம் தீட்டி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>