×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவு கவர்னர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. எதையும் எதிர்பாராமல் அன்பை மட்டுமே கொடுக்கும் தாயாரின் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது. முதல்வருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழக முதல்வரின் தாயார் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் முதல்வருக்கும் மற்றும் அவரது  குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்  கொள்கிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: முதல்வர் எடப்பாடிபழனிசாமிக்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை. தாயன்புக்கு நிகர் என்ன இருக்க முடியும்? தாயார் தவுசாயம்மாளை பிரிந்து வாடும் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் எனது சார்பிலும் அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு துயருற்றேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்-அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 93 வயது நிரம்பிய தாயார் தவுசாயி அம்மாள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவருக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: முதல்வரின் தாயார் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தாயாரை இழந்து வாடும் அவரது புதல்வர் முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: முதல்வரின் தாயார் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தாயாரை இழந்து வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: முதல்வரின் தாயார் காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையறிந்து வேதனைப்படுகிறேன். அவரை இழந்து துயருரும் முதல்வர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல தமாகா தலைவர், ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், சமக தலைவர் சரத்குமார், எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், தமாகா மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், மனித நேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் ஏ.நாராயணன், சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்களும் முதல்வர் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வர் எடப்பாடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

* எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, அவரது தாயார் மறைவிற்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

Tags : Edappadi Palanisamy , Chief Minister Edappadi Palanisamy's mother passed away
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்