×

நீதிமன்றம், நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு ஆந்திர முதல்வரிடம் விளக்கம் கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: ‘நீதிமன்றங்கள், நீதிபதிகள் மீது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருவதால், இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்,ஏ.பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இரு தினங்களுக்கு முன்னதாக நேரடி அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தனது செல்வாக்கை பயன்படுத்தி, விசாரணைகளை தடுக்கிறார். குறிப்பாக, ஆந்திர முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் தம்மலபதி சீனிவாஸ் மேற்கொண்ட நில பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகள் இவர் தலையீடு செய்ததால் தான் உயர் நீதிமன்றம் அது தொடர்பான விசாரணையை நிறுத்தி வைத்துள்ளது. இதுபோன்ற செயல்கள் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்கும் விதமாகவும், நீதித்துறை மரபு மற்றும் அடிப்படைக் கொள்கையை மீறும் விதமாகவும் உள்ளது,’ என கூறியுள்ளார். இது, மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வழக்கறிஞர் சுனில் குமார் சிங் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு எதிரான குற்றாச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருக்கும் என்.வீ.ரமணா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, அது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்புகளின் போது வெளிப்படையாக பேசி வருகிறார். இது குறித்து தலைமை நீதிபதிக்கே கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது நீதிமன்றம் மாண்பை கெடுக்கும் செயல்களாகும். அதனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து, ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது. இதையடுத்து, வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிய வருகிறது.


Tags : court ,judges ,AP ,Supreme Court , The court should ask the AP chief to explain the allegations against the judges: the case in the Supreme Court
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...