×

விஸ்வரூபம் எடுக்கும் தங்கம் கடத்தல் விவகாரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் திடீர் மூடல்: விசாரணைக்கு பயந்த அதிகாரிகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் திடீரென மூடப்பட்டு உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடந்த 2016ல் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தொடங்கப்பட்டபோது துணைத் தூதரின் நிர்வாக செயலாளர் பணியில் சொப்னா சேர்ந்தார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு அக்டோபர் வரை பணியில் இருந்தார். பின்னர், சில பிரச்னைகள் காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, அதே அக்டோபர் 21ம் தேதி கேரள அரசின் விண்வெளி பூங்கா திட்டப் பணியில் சேர்ந்தார். அரசு திட்ட பணியில் சேர்ந்த பிறகுதான் தங்கம் கடத்தலில் ஈடுபட தொடங்கி உள்ளார்.

 கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த அமீரக தேசிய விழாவை சொப்னாதான் முன்னின்று நடத்தி உள்ளார். தூதரக பணியில் இருந்து விலகி, கேரள அரசு திட்ட பணியில் சேர்ந்தவர், எப்படி அமீரக தூதரக விழாவை  நடத்தினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேரள தங்க கடத்தல் விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், வரும் 20ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், விசா அனுமதி உள்பட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. சில ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, துணைத் தூதரான ஜமால் உசேன் அல்சாபி கடந்த சில மாதங்களுக்கு முன்பே துபாய் சென்று விட்டார். இன்னும் அவர் திரும்பவில்லை. தங்கம் கடத்தலில் அமீரக தூதரகத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக அமீரக தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. விசாரணைக்கு பயந்தே தூதரகம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே துணைத் தூதரகத்தை ஐதராபாத்துக்கு மாற்றும் முயற்சி  நடப்பதாகவும் கூறப்படுகிறது.

* சொப்னாவுக்கு ஜாமீன்
மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி சொப்னா எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்றுமுன்தினம் நடந்தது. இறுதியில் சொப்னாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், சுங்க இலாகா காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதால் சொப்னாவால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது. ஏற்கனவே, சுங்க இலாகா தொடர்ந்த வழக்கிலும் சொப்னாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. என்ஐஏ தொடர்ந்த வழக்கில் சொப்னாவின் நீதிமன்ற காவல் தொடரும் நிலையில், அந்த வழக்கிலும் சொப்னா கும்பல் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

* 19 முறை கடத்தல்
தூதரகம் மூலமாக சொப்னா தங்கம் கடத்தியது, பல்வேறு அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு  இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை  என்று விசாரணை அமைப்புகள் கருதுகின்றன. நவம்பரில் 4 முறை,  டிசம்பரில்  12, ஜனவரி,  மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் தலா ஒருமுறை என்று மொத்தம் 19 முறை தூதரக பார்சலில் தங்கம் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஜூன் 30ம் தேதி தங்கம்   கடத்திய போதுதான் சொப்னா கும்பல் பிடிபட்டது. இது, மத்திய  அமலாக்கத் துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.

Tags : UAE ,embassy , UAE embassy abruptly shut down over gold smuggling case
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...