×

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க நடத்திய 7வது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தது: இந்தியா, சீன ராணுவம் கூட்டறிக்கை

புதுடெல்லி: லடாக் எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக நடந்த 7வது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக இந்தியா, சீன ராணுவ கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் காரணமாக கடந்த 5 மாதமாக எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த 6 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்ற 7வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு இந்திய எல்லைக்கு உட்பட்ட சுஷுல் பகுதியில் தொடங்கியது. சுமார் 12 மணி நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தை குறித்து இரு நாட்டு ராணுவமும் நேற்று கூட்டறிக்கை வெளியிட்டன.

அதில், ‘7வது சுற்று பேச்சுவார்த்தை நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது. இருதரப்பும் உண்மையான, ஆழமான, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளன. ஒருவருக்கொருவர் நிலைப்பாடுகளை புரிந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டு உள்ளது. மேலும், ராணுவ மற்றும் தூதரக ரீதியாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். வேறுபாடுகளை மோதல்களாக மாற்றக் கூடாது, எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு தரப்பும் இணைந்து செயல்பட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

* ‘லடாக் சட்ட விரோதமானது’
இரு தரப்பு ராணுவ பேச்சுவார்த்தை நடந்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 44 பாலங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இதில், 8 பாலங்கள் லடாக்கிலும், 8 பாலங்கள் அருணாச்சல பிரதேசத்திலும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜியோ லிஜியன் அளித்த பேட்டியில், ‘‘லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா அங்கீகரிக்கவில்லை. இதை சட்ட விரோதமாக இந்தியா அமைத்துள்ளது. அதே போல், அருணாச்சல் உள்ளிட்ட எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம். இதுதான் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட அடிப்படையான காரணம்,’’ என்றார்.

Tags : statement ,talks ,border ,Ladakh ,China ,India , 7th round of talks to ease tensions on Ladakh border: India, Chinese military joint statement
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது