×

வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

கூடுவாஞ்சேரி: நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி 14வது வார்டு, குப்புசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாபு (63). இவரது மனைவி நிர்மலா (59). இவர்களது மகன் ராம்சுந்தர் (27). கடந்த 3ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி கிராமத்தில் உள்ள சகோதரிகளை பார்க்க அனைவரும் சென்றனர். நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 சவரன் நகை, ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பஜார் வீதியில் கிளினிக் அமைந்துள்ளது. இதனை டாக்டர் குமார் என்பவர் நடத்தி வருகிறார். கூவத்தூரை சேர்ந்த மூர்த்தி (33), சரவணன் (29) நாவக்கால் கிருபாகரன் (27) ஆகியோர், டாக்டர் குமாரை மிரட்டி பல லட்சம் வாங்கியுள்ளனர். பின்னர், டாக்டருக்கு சொந்தமான இடத்தை, தங்களது பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் மறுத்ததால், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து டாக்டர் குமார், கூவத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 2 நாட்களுக்கு முன் மூர்த்தி, சரவணன் ஆகியோரை பரமன்கேனி பகுதியில் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். இந்நிலையில், கேளம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கிருபாகரன் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார், நேற்று அப்பகுதிக்கு சென்று அவரை மடக்கி பிடித்தனர். அவர் மீது, கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தில் முதியோர் தம்பதியை கொன்று, கொள்ளையடித்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என கூறப்படுகிறது.

திருப்போரூர்: திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். இங்குள்ள தொழிலாளர்களுக்கு, சிலர் ரகசியமாக கஞ்சா சப்ளை செய்வதாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வடமாநில தொழிலாளர் குடியிருப்பில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கந்தர்வ பிரதான் குமார் (56) என்பவரை கைது செய்தனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் தனியார் கிரஷர் இயங்குகிறது. இங்கு சென்னை திரிசூலத்தை சேர்ந்த குழந்தைவேல் (58) என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றினார். இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தைவேலு, கிரஷரில் பணியில் ஈடுபட்டார். மாலையில், கற்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. பின்னர், அதில் இருந்த கற்கள் ஜல்லிக்கற்களாக மாற்ற, மெஷினில் கொட்டப்பட்டுன. அப்போது, லாரியில் இருந்து ஒரு பெரிய கல், குழந்தைவேலு தலையில் விழுந்து அவர் படுகாயமடைந்தார். இதை கண்டதும், ஊழியர்கள், அவரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைவேலு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின்படி சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை: சென்னை தி.நகர் கார்பரேஷன் காலனி 5வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (73). சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஜனவரி 21ம் தேதி, 3 பேர், வெங்கட்ராமன் ஆட்டோவை அடித்து உடைத்து சென்றனர். புகாரின்படி, பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 9 மாதங்களாக தலைமறைவாக இருந்த செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் பாரதி நகரை சேர்ந்த கோபிநாத் (எ) கோபியை (23) கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : shaving robbery ,house , House breaking 15 shaving robbery: web for mystics
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்