×

காவேரிப்பாக்கம் அருகே பயங்கரம் காஞ்சிபுரம் கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலை: 3 பேரை பிடித்து தனிப்படை விசாரணை

காஞ்சிபுரம்: காவேரிப்பாக்கம் அருகே கட்டிட மேஸ்திரி அடித்து கொலை செய்யப்பட்டார். தொடர்பாக 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த பொய்கை நல்லூர் மக்ளியன் கால்வாய் அருகே 40 வயது மதிக்கத்த ஆண் சடலம் நேற்று கிடந்தது. இதுபற்றி அவளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனன், அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, எஸ்ஐ மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விஏஓ உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின்படி, அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில், அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமிபதி (காவேரிப்பாக்கம்), பாரதி (பாணாவரம்), ஜெயபிரகாஷ் (சோளிங்கர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க, எஸ்பி மயில்வாகனன் உத்தரவிட்டார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தவர், காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40), கட்டிட மேஸ்திரி. அவரது மனைவி காவேரிப்பாக்கத்தை சேர்ந்த சித்ரா (34). இவர்களுக்கு 14 வயதில் மகன், 13 வயதில் மகள் உள்ளனர். கணவன்,  மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் என தெரிந்தது.

சடலம் கிடந்த இடத்தில், ரத்த கரையுடன் கட்டுக்கல், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் உட்பட மது அருந்தியதற்கான தடயங்கள் சிக்கின. இதனால், சுரேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார், சுரேஷின் சொந்த ஊரைச் சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், சுரேஷுடன் மது அருந்தியவர்கள் அடித்து கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என தெரியவில்லை. தற்போது 3 பேரை பிடித்து விசாரிக்கிறோம். மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. முழுமையான விசாரணைக்கு பின் கொலைக்கான காரணம் தெரியும் என்றனர்.

Tags : building ,Kanchipuram ,murder ,investigation ,Kaveripakkam , Kanchipuram building masterminded murder near Kaveripakkam: 3 arrested and private investigation
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...