×

ஜிஎஸ்டி இழப்பீடு பிரச்னை ரூ.68,825 கோடி கடன் வாங்க 20 மாநிலங்களுக்கு அனுமதி

புதுடெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில், 20 மாநிலங்கள் ரூ.68,825 கோடி கடன் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்பிறகு மாநில அரசுகள் தங்களுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய இழப்பீட்டை போராடி பெற்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைக் காரணம் காட்டி, மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்து விட்டது.

அதே நேரம், ஜிஎஸ்டி இழப்பீடான ரூ.97,000 கோடியை பெற விரும்பும் மாநிலங்கள், ரிசர்வ் வங்கி மூலமாக கடன் பத்திரங்கள் வெளியிட்டு திரட்டிக் கொள்ளலாம் என கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 20 மாநிலங்கள் மத்திய அரசின் யோசனையை ஏற்றன. ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், கோவா, குஜராத், அரியானா, இமாசலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள், விருப்பத்தேர்வு 1ஐ தேர்வு செய்துள்ளன. இதன்படி இந்த மாநிலங்கள் ரூ.68,825 கோடி கடன் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Tags : states , 20 states allowed to borrow Rs 68,825 crore on GST compensation issue
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்