×

சேலத்தில் உடல் நலக்குறைவால் மரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் சொந்த ஊரில் தகனம்: அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி

சேலம்: சேலத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நேற்று காலை தகனம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சிலுவம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணகவுண்டர். இவரது மனைவி தவுசாயி அம்மாள் (93). இவர்களுக்கு, விஜயலட்சுமி என்ற மகளும், கோவிந்தராஜ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என 2 மகன்கள் உள்ளனர். கருப்பண்ணகவுண்டர் சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தவுசாயி அம்மாள் மூத்த மகன் கோவிந்தராஜூடன் சிலுவம்பாளையத்தில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக தவுசாயி அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு, நேற்றுமுன்தினம் இரவு 12.15 மணியளவில் காலமானார். அவரது உடல் உடனடியாக இடைப்பாடி அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. தாய் இறந்தது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு, நேற்று காலை 6 மணியளவில் சிலுவம்பாளையம் வந்தார். தாயாரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவர், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருக்கு உறவினர்களும், கட்சியினரும் ஆறுதல் கூறினர். காலை 7.30 மணி அளவில் தவுசாயி அம்மாளின் உடலுக்கு, வீட்டில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

பின்னர், காலை 8 மணி அளவில், அவரது உடல் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், கருப்பணன், சரோஜா, அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், உதயகுமார், சம்பத், வீரமணி, டாக்டர் விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி எம்பி., மற்றும் எம்எல்ஏக்கள் செம்மலை, சக்திவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர், சிலுவம்பாளையம் மயானத்தில், அண்ணன் கோவிந்தராஜ் இறுதி சடங்குகளை செய்தார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் விட்டு அழுதார். இதைதொடர்ந்து, தவுசாயி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, கூடுதல் டிஜிபிக்கள் ராஜேஸ் தாஸ், ஜெயந்த் முரளி, சேலம் கலெக்டர் ராமன், ஈரோடு கலெக்டர் கதிரவன் மற்றும் அதிகாரிகள்  தவுசாயி அம்மாளின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திமுகவினர் ஆறுதல்: முன்னாள் அமைச்சரும் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.எம். செல்வகணபதி, மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் எம்பி பார்த்திபன் மற்றும் திமுகவினர், சிலுவம்பாளையத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து ஆறுதல் கூறினர். தவுசாயி அம்மாள் உருரவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஓ.பி.எஸ். அஞ்சலி: நேற்று மாலை 6.35 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சிலுவம்பாளையம் வந்து, முதல்வரின் தாயார் தவுசாயி அம்மாள் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினார். அவருடன் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் பி.எச்.மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Tags : Edappadi Palanisamy ,hometown ,Many ,ministers , Chief Minister Edappadi Palanisamy's mother's body cremated in his hometown: Many, including ministers, pay tribute
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்