உத்தர பிரதேசத்தில் குழந்தை பெற்ற 2 வாரத்தில் வேலைக்கு வந்த ஐஏஎஸ்

காஜியாபாத்: உத்தர பிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களில், பெண் ஐஏஎஸ் அதிகாரி பணியில் சேர்ந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யம் அடைய செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் தாலுகாவின் கொரோனா பணி அதிகாரியாக கடந்த ஜூலை மாதம் பணியில் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சவும்யா பாண்டே. இவர் பணியில் சேரும் போது கர்ப்பமாக இருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் வரை கொரோனா பணியாற்றிய அவர், பேறுகால விடுப்பில் சென்றார். பின்னர், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், குழந்தை பிறந்து இரண்டு வாரங்களான நிலையில் நேற்று அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார். தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக தனது கடமையை செய்ய பணியில் சேர்ந்ததாகவும், கொரோனா தடுப்பு பணியில் அனைவருக்கும் பொறுப்புள்ளது என்றும் கூறிய சவும்யா, கிராமங்களில் பெண்களே குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின்பும் வீட்டு வேலைகளுடன், கூலி வேலையும்பார்த்து வருவதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், ``குடும்பத்தினரும் தாலுகா மக்களும் எனக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர். குழந்தை பெறுவதற்கான வலிமை கடவுள் பெண்களுக்கு கொடுத்த வரம்,’’ என்றார்.

Related Stories:

>