×

முதல்வர் வேட்பாளர் பிரச்னையை முடித்து வைத்த கையோடு அதிமுகவிடம் 60 தொகுதிகள் கேட்டு பாஜ நெருக்கடி: தேசிய பொதுச்செயலாளர் 17ம் தேதி சென்னை வருகை

சென்னை: அதிமுகவில் முதல்வர் பதவி விவகாரத்தை முடித்து வைத்த பாஜ மேலிடம், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 60 தொகுதிகள், துணை முதல்வர் பதவியை கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது. வருகிற 17ம் தேதி அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சென்னை வந்து ஆலோசனை நடத்துகிறார். பாமகவும் துணை முதல்வர் வேட்பாளர் என்ற கோஷத்தை எழுப்ப தொடங்கியுள்ளது. இது, ஆளும் கட்சி வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கடந்த மக்களவை தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்கப்பட்டது. பாஜவுக்கு 5 தொகுதிகள், தேமுதிகவுக்கு 4 தொகுதிகள், புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ நீடிக்கும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

அதேநேரத்தில், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் கடந்த சில மாதங்களாக தமிழக அரசின் பல்வேறு முடிவுகளையும், மத்திய அரசின் பல்வேறு முடிவுகளையும் கண்டித்து வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. ஆனால் கணிசமான ஓட்டுக்களைப் பெற்றது. இதனால் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிக சீட்டுகளைப் பெற்றது. ஆனால் பாஜ கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டுகளை பல தொகுதிகளில் பெற்றது. இதனால் 5 தொகுதிகளை மட்டுமே கூட்டணியில் வாங்க முடிந்தது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்த பல தலைவர்களை தங்களது கட்சியில் சேர்த்துள்ளது.

மேலும், மத்தியில் ஆளும் கட்சியில் இருப்பதால் பல்வேறு ரவுடிகளையும் தங்களது கட்சியில் சேர்த்துள்ளது. இதனால் தங்களது கட்சி பலம் பெற்று விட்டதாக அக்கட்சி கருதுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளையும், துணை முதல்வர் பதவியை ஒதுக்குவது குறித்தும் முன்கூட்டியே கேட்டுப் பெற பாஜ முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் ஆலோசனை நடத்தி 60 தொகுதிகளின் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த பட்டியலை டெல்லி மேலிடத்தில் தமிழக பாஜ தலைவர் முருகன் வழங்கியுள்ளார். இந்த தொகுதிகளில் சுறுசுறுப்பாக பணிகளை செய்யுமாறு டெல்லி தலைமையும் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக அதிமுகவிடம் தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முன்னதாகவே 60 தொகுதிகளை குறிவைத்து பாஜ வேலைகளை தொடங்கி விட்டது. அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு மேல் மோதல் நீடித்தது. இதனால் கட்சி உடையும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது பாஜ மேலிடம் நேரடியாக தலையிட்டது. இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால் வழிகாட்டு குழு அமைக்கும் முடிவுக்கு சம்மதிக்காத எடப்பாடி பழனிசாமி, பின்னர் குழு அமைக்க சம்மதம் தெரிவித்தார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பேசியுள்ளார். இதனால் அதிமுகவில் சமரசம் ஏற்பட்டது. அதிமுகவில் பஞ்சாயத்து செய்து வைத்த பாஜ எப்படியும் தாங்கள் கேட்கும் 60 தொகுதிகளை கொடுத்துதான் ஆக வேண்டிய நிலையில் அதிமுக உள்ளதாக கருதுகிறது. அதிமுகவில் பல அமைச்சர்களின் ஊழல் பட்டியல், வருமான வரி தொடர்பான பல வழக்குகள், குட்கா உள்ளிட்ட பல்வேறு சிபிஐ வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தாங்கள் கேட்கும் தொகுதிகளை அதிமுக கொடுக்கும் என்று நம்புகிறது. எனவே, இந்த 60 தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தவும், இந்த தொகுதிகளில் உடனடியாக வேலைகளை தொடங்கவும் பாஜ திட்டமிட்டுள்ளது.

மேலும் பாஜ தலைவர் ஒருவரை துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக பாஜ தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி வருகிற சனிக்கிழமை (17ம் தேதி) சென்னை வருகிறார். இவர், கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கு போட்டியிட்டவர். எடியூரப்பா விடாப்பிடியாக முதல்வர் பதவி கேட்டதால், இவர் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்சிப் பதவிக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார். அவருக்கு தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இவரது முன்னிலையில்தான் நடிகை குஷ்பு பாஜவில் சேர்ந்தார். தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராக ஓரிரு நாளில் இவர் அறிவிக்கப்பட உள்ளார்.

இதனால் வருகிற சனிக்கிழமை சென்னை வரும் சி.டி.ரவி, தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதோடு, 60 தொகுதிகளை கேட்டு பெறுவதோடு, முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், தமிழக தேர்தல் நிலவரம் குறித்து விசாரணை நடத்தி, பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருக்கு அறிக்கை அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன. அதிமுகவில் இப்போதுதான் முதல்வர் வேட்பாளர் விவகாரம் முடிந்துள்ளது. அதற்குள் துணை முதல்வர் வேட்பாளர் விவகாரமா என்று அதிமுக தொண்டர்கள் புலம்பத் தொடங்கிவிட்டனர்.

* துணை முதல்வர் பதவி கேட்கும் பாமக
பாமகவும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று  கூறி வந்தது. ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்றால்  துணை முதல்வர் வேட்பாளராக பாமகவைச் சேர்ந்தவரை அறிவிக்க வேண்டும் என்று கேட்க தொடங்கியுள்ளது. இதற்காக அக்கட்சியின் கூட்டங்களில் ஆலோசனை  நடத்தப்பட்டும் வருகிறது. விரைவில் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். பாஜவும், பாமகவும் துணை முதல்வர் பதவி கேட்க ஆரம்பித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : crisis ,BJP ,constituencies ,CM ,AIADMK ,Chennai ,General Secretary , BJP crisis: AIADMK demands 60 constituencies with AIADMK
× RELATED குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி!:...