×

சங்கரன்கோவில் ராணுவ வீரர் மர்ம சாவு; அதிகாரிகள் தகவல் தெரிவிக்காததை கண்டித்து குடும்பத்தினர் திடீர் மறியல்: `உடலை வாங்கமாட்டோம்’ என ஆவேசம்

சங்கரன்கோவில்: ஜம்மு - காஷ்மீரில் பணியின்போது இறந்த சங்கரன்கோவில் ராணுவ வீரரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் இன்று காலை திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ராணுவ வீரர் இறந்தது தொடர்பாக அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் எனவே உடலை வாங்கமாட்டோம் என குடும்பத்தினர் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டியன் மகன் முல்லைராஜ் (28). திருமணம் ஆகாத இவர் கடந்த 9 ஆண்டாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 11ம்தேதி பணியின்போது முல்லைராஜ் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது  தாய் அழகம்மாள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ராணுவவீரர் முல்லைராஜ் மரணம் குறித்து அறிந்ததும் அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னையில் அரசு துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ராணுவ வீரர் முல்லைராஜ் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், அது  தொடர்பான தகவலை குடும்பத்திற்கு தெரிவித்து அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர  நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

முல்லைராஜின் தாய் அழகாத்தாள் மற்றும் குடும்பத்தினர் நேற்று சங்கரன்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த மனுநீதி நாள் கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் அருண்சுந்தர் தயாளனிடம் மனு அளித்தனர். மனுவில் முல்லைராஜ் எப்படி இறந்தார். அவரது உடல் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இந்நிலையில் முல்லைராஜின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர்  ஆயாள்பட்டி விலக்கில் சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் இன்று காலை 10.30 மணி அளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சங்கரன்கோவில் டிஎஸ்பி பாலசுந்தரம் மற்றும் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து முல்லைராஜின் குடும்பத்தினர் கூறுகையில், ராணுவ வீரர் முல்லைராஜ் இறந்ததாக தகவல் தெரிவித்து 2 நாள் ஆன நிலையில் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து அதிகாரிகள் முறையான தகவலை எங்களிடம் தெரிவிக்கவில்லை. இதனால் நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். முல்லைராஜ் மரணம் குறித்து அதிகாரிகள் முறையாக தகவல் அளிக்க வேண்டும். சரியான காரணத்தை  தெரிவிக்காவிட்டால் முல்லைராஜ் உடலை பெறப்போவதில்லை என்று உருக்கத்துடன் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags : death ,soldier ,Family members ,Sankarankoil , Mysterious death of a soldier in Sankarankoil; Family members protest against authorities' failure to provide information: 'We will not buy the body,' he said
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு