×

'கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?'... ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி!

மதுரை: கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை அருகே உள்ளது துவரிமான் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மதுரேசன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர். இவர் தடகள போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் மற்றும் உலக அளவில் பங்கேற்று 100-க்கும் அதிகமான பதக்கங்களை வாங்கியுள்ளார். இவருக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ரொக்க பரிசுகளும் அறிவித்திருக்கின்றன. இவர் விளையாட்டு வீரர் என்பதால் மாநில அரசு ஒரு வேலையும் வழங்கியுள்ளது.

அதாவது அலுவலக உதவியாளராக இவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில்; மத்திய, மாநில அரசுகள் அனைத்து விளையாட்டு துறையில் உள்ள விளையாட்டு வீரர்களையும் சமமாக பார்க்க வேண்டும். சமமான வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு வழங்கக்கூடிய ரொக்க பரிசுகளை அனைவர்க்கும் இணையாக வழங்க வேண்டும். இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள்கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை மத்திய மாநில அரசுகளுக்கு எழுப்பியுள்ளனர். குறிப்பாக இது போன்ற மாற்றுத்திறனாளி வீரர்களை சீனா உள்பட பல்வேறு நாடுகள் இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆகையால் தான் இவர்கள் ஒலிம்பிக் உள்பட பல்வேறு உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து அவர்கள் பதக்கங்களை பெற்று வருகின்றனர். ஆனால் நமது நாட்டை பொறுத்தவரை அதிலும் குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டு; கிரிக்கெட் வீரர்களை மட்டும் தான் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

ஆகையால் இந்த விளையாட்டு வீரர்களை பற்றி நாம் யாரும் எதுவும் கண்டுகொள்வதில்லை. அதேபோலவே மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவர் 10-ம் வகுப்பு படித்து பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார் என்பதற்காக ஒரு அலுவலக உதவியாளராக தூய்மை பணி வழங்கியிருக்கிறார்கள். இதே தகுதியை கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரும் 10-ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை பெற்றுள்ளார். இவருக்கு இது போன்ற அலுவலக உதவியாளர் பணியில் மத்திய, மாநில அரசுகள் அமர்த்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன மாதிரியான ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சிகள் உள்ளது? அவர்களுக்கு என்ன ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஒரு விரிவான பதிலறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

Tags : Sachin Tendulkar ,office assistant ,ICC Madurai , 'Will you appoint cricketer Sachin Tendulkar as office assistant?' ... ICC Madurai branch judges barrage question!
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!