×

மலை உச்சியில் கட்டிடம் கட்டியதோடு அய்யர்மலையில் கிடப்பில் கிடக்கும் ரோப்கார் திட்டம்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் உள்ளது சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல 1017 படிகள் ஏறி செல்ல வேண்டும். மேலும் இக்கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதம் சித்திரை தேர் திருவிழா 12 நாட்கள் நடைபெறும். கார்த்திகை மாதம் சோமவாரம் சிறப்பாக நடைபெறும். இத்தனை சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குடி பாட்டுக்காரர்கள், பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களிலிருந்தும், சுற்றுவட்டாரங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் குடி பாட்டுக்காரர்கள், பொதுமக்கள் ரத்தினகிரீஸ்வரரை தரிசிக்க வரும்போது முதியவர்கள், சிறுவர்கள் மலை உச்சிக்கு செல்வது மிக சிரமமாக இருந்து வந்தது. இதையடுத்து அப்போதைய திமுக எம்எல்ஏ மாணிக்கத்திடம் பொதுமக்கள், பக்தர்கள் ரோப் கார் வசதி தேவை என கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ மாணிக்கம் இந்து அறநிலையத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு குளித்தலை தொகுதி அய்யர் மலையில் பக்தர்கள் கோரிக்கை ஏற்று ரோப் கார் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

அக்கோரிக்கையை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பரிந்துரை செய்து அதற்கான உத்தரவு பெறப்பட்டது. அதன் பிறகு முதன்முதலில் இந்து அறநிலைய துறை சார்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள் வழங்கிய ரூ.2 கோடி ஆக மொத்தம் ரூ.4 கோடி நிதி பெறப்பட்டு அடிக்கல் நாட்டு விழா கடந்த 2.2.2011 அன்று அப்போதைய அறநிலைய துறை அமைச்சர் முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்றது. ரோப்கார் பணி தொடங்கும் நேரத்தில் ஆட்சி மாற்றத்தால் பணி தொய்வடைந்து பின்னர் குடி பாட்டுக்காரர்கள், பொதுமக்கள் வழங்கிய நிதியினை பல்வேறு வங்கிகளில் போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் கோரிக்கையை ஏற்று முடங்கிக் கிடந்த ரோப்கார் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.

அதன் பிறகு ரத்தினகிரீஸ்வரர் கோயில் மலை உச்சியில் ரோப் காருக்கு கட்டிடம் கட்ட தற்காலிக ரோப் கார் கம்பி அமைக்கப்பட்டு அனைத்து பொருட்களும் மேலே கொண்டு செல்லப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. அதேபோன்று அடிவாரத்திலும் கட்டிடம் கட்டப்பட்டு அடிவாரத்தில் இருந்து உச்சி மலைக்கு செல்லும் வகையில் ரோப் காருக்கான கம்பிகளும் வந்து சேர்ந்தன. சித்திரை தேர் திருவிழாவிற்குள்ளாவது பணி முடிந்துவிடும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததாக தெரியவில்லை. ரோப்கார் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டு வருகிறதா, இல்லை கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்பதால் காலதாமதம் ஏற்படுகிறதா என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுத்து தொய்வடைந்த அய்யர்மலை ரோப்கார் திட்டத்தினை விரைந்து முடிக்க பொதுமக்களும், பக்தர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Tags : building ,hilltop , Ropecar Project, Ayyarmalai
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...