×

கொரோனா காலத்தில் ஆன்லைனில் எம்.எஸ்சி தேர்வு எழுதிய 67 வயது பேரழகி!

நன்றி குங்குமம்

சுதந்திரப் போராட்டத் தியாகி குடும்பம்... 1969ல் எஸ்எஸ்எல்சி... 2010 - 11ல் டிப்ளமா... 2018ல் பி.எஸ்சி...
கற்றலுக்கு வயது ஒரு தடையில்லை என்பார்கள். அதற்கு சிறந்த உதாரணமாகக் காட்சியளிக்கிறார் சுசீலா. 67 வயதாகும் அவர் இந்தக் கொரோனா காலத்தில் எம்.எஸ்சி இறுதியாண்டு தேர்வை ஆன்லைனில் எழுதி முடித்திருப்பது ஆச்சரியமான விஷயம். படிப்பின் மீதான தீராக் காதலும், ஆர்வமும் அவரை ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முதுநிலைப் பட்டப்படிப்பை முடிக்க வைத்திருக்கிறது. மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்கிற ஆழ்ந்த யோசனையில் இருந்தவரிடம், ‘இந்த வயதில் பட்டப்படிப்பு மீது ஏன் இவ்வளவு ஆர்வம்’ என்றபடியே பேசத் தொடங்கினோம்.  ‘‘இது 19 வயசுல வந்த ஆர்வம். இப்பதான் நிறைவேறியிருக்கு. ரொம்ப சந்ேதாஷமா உணர்றேன். இன்னும் நிறைய படிக்கணும்னு இருக்கேன்...’’ என உற்சாகமாக ஆரம்பித்தார் அவர்.  ‘‘நான் 1969ல் எஸ்.எஸ்.எல்.சி முடிச்சேன். எனக்குக் கல்லூரி யில பட்டப்படிப்பு படிக்கணும்னு ரொம்ப ஆசை. எங்களுக்குப் பூர்வீகம் திருப்பூர். ஆனா, அப்ப அங்க கல்லூரியெல்லாம் கிடையாது. கோயமுத்தூர்லதான் இருந்துச்சு. எங்க குடும்பம் ஆச்சாரமானது. பாட்டியும் கூட இருந்தாங்க. அதனால, படிச்சது போதும்னு சொல்லி வீட்டை விட்டு வெளியே அனுப்ப மறுத்துட்டாங்க. கோவை ரொம்ப தூரம்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டாங்க. என் அப்பா தமிழ்நாடு சர்வோதய சங்கத்துல காசாளரா வேலை பார்த்தார். காந்தி கொள்கையில் அதீத ஈடுபாடு கொண்டவர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்துல கலந்துக்கிட்டு ஒன்றரை ஆண்டு கோயமுத்தூர் சிறையில் இருந்தவர். தியாகி குடும்பம். வீட்டுல நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள்னு ஆறு குழந்தைங்க. பாட்டியுடன சேர்த்து மொத்தமா ஒன்பது பேர். அம்மா எங்களையும் வீட்டையும் கவனிச்சிக்கிட்டாங்க. அப்பாவுக்கு 150 ரூபாய் சம்பளம்.

அதனால அவர், படிக்க வைக்க என்னால முடியாதுமானு சொல்லிட்டார். அப்ப நாங்க ராட்டை நூற்போம். எட்டு வயசுல இருந்து இந்தப் பணியை மேற்கொள்ளணும். நூல் நூற்று சர்வோதய சங்கத்துல கொடுக்கணும். ஒரு சிட்டத்துக்கு 20 பைசா கொடுப்பாங்க. ஒரு சிட்டம் என்பது சதுரமான சட்டம். அதுல நூறு நூல் சுத்தினா ஒரு கண்ணினு கணக்கு. அந்தமாதிரி பத்து கண்ணி சுத்துனா ஒரு சிட்டம். அதுக்கு 20 பைசா தருவாங்க. இதுல பத்து பைசா தீபாவளிக்கு பிடிச்சிப்பாங்க. தீபாவளி அப்ப துணி எடுத்துக்கலாம். இல்ல, பிடிக்க வேண்டாம்னா 20 பைசாவை முழுசா கொடுத்திடுவாங்க. நான் அப்பாகிட்ட ‘ராட்டை நூற்றாவது பஸ்ஸுக்கான காசு சேர்த்துக்கிறேன்பா. என்னை கல்லூரியில் பியுசி சேர்த்துவிடுங்க’ னு சொன்னேன். அப்பவும் அப்பா முடியாதுன்னுட்டார். அந்த வயசுலேயே திருமணமும் பண்ணி வச்சிட்டாங்க. பட்டப்படிப்புங்கிறது ஒரு கனவாவே இருந்துச்சு. எனக்கு படிக்கிறதுல அதீத ஆர்வம். புத்தகங்கள் நிறையப் படிப்பேன். அப்பெல்லாம் வீட்டுச் சாமான்கள் பேப்பர்ல மடிச்சுதான் வரும். அந்தப் பேப்பரைக் கூட விடாமல் படிச்சிட்டு இருப்பேன். உலகத்துல நடக்குற விஷயங்கள தெரிஞ்சுக்கணும்னா அதற்கு ஒரே வழி படிப்புதான். அந்தக் காலம்ங்கிறதால எனக்கு தொலைதூரக் கல்வி பத்தியும் தெரியாது. எடுத்துச் சொல்றதுக்கு ஆட்களும் இல்ல. இப்ப உள்ள கல்வி சம்பந்தமான செய்திகள் அப்ப அவ்வளவா பத்திரிகைகளிலும் வராது. என் கணவர் படினு ஊக்கம் தந்தாலும் கூட எனக்கு அதை எப்படி அணுகணும்னு தெரியல. அதுக்குப்பிறகு, என்னுடைய உறவினர் ஒருத்தர் திருமணமாகிய பின்பு படிச்சாங்க. அவங்ககிட்ட போய் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அந்த கல்வியாண்டுல இருந்து எஸ்எஸ்எல்சி-க்குப் பிறகு பிளஸ் டூ படிச்சால்தான் கல்லூரிக்குப் போக முடியும்னுட்டாங்க. அதாவது, முன்னாடி பியுசி முடிச்சு காலேஜ் போகணும். இப்ப, பிளஸ் டூ வந்திடுச்சு.

என்னுடைய கணவர் சாய்ராம் கோவையில் வணிக வரித்துறை அலுவலரா இருந்தார். கொஞ்சம் நேர்மையானவர் என்பதால் ஆறு மாசத்திற்கு ஒருமுறை மாத்திட்டே இருந்தாங்க. அதனால, நாங்க ஒருபக்கமும், அவர் வேற பக்கமுமா இருந்தோம். இதனால அவராலும் படிப்பு சம்பந்தமா எனக்கு உதவ முடியல.
மூணு பெண் குழந்தைகள் பிறந்துட்டாங்க. குழந்தைகளையும், மாமனார், மாமியாரையும் கவனிக்க வேண்டி இருந்ததால என் ஆசைகளைத் தள்ளி வச்சிட்டேன். ஆனாலும் உள்ளுக்குள்ள படிக்கணும்ங்கிற நெருப்பு மட்டும் சுடர்விட்டு எரிஞ்சிட்டே இருந்துச்சு... 1986ல் பிரம்மகுமாரிகள் அமைப்புல சேர்ந்தேன். இப்ப நான் ராஜயோக ஆசிரியரா 33 வருஷமா இருக்கேன். இவங்க ராஜயோக கல்வி மற்றும் ஆய்வு அறக்கட்டளையை நடத்திட்டு இருக்காங்க. கடந்த 2009ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இந்த ராஜயோக ஆய்வு அறக்கட்டளையை இணைச்சாங்க. அதுல ‘நீங்க ஒரு டிப்ளமா எழுதுங்க. பட்டப்படிப்பு முடிக்கலாம்’னு சொன்னாங்க. அப்புறம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல 2010 - 11ல் மதிப்புணர்வு கல்வி மற்றும் ஆன்மீகம் என்ற கோர்ஸ் எடுத்தேன். ஆங்கிலத்துல இதை Value Eduction and Spiritualityனு சொல்வாங்க. குரான், பைபிள், மகாவீரர், புத்தர்னு எல்லாம் படிக்கணும். அப்படியே என்னுடைய சிந்தனைகளும் விரிஞ்சது. டிப்ளமா முடிச்சதும் பி.எஸ்சி-க்காக காத்திருந்தேன். ஏன்னா, அவங்க அந்த கோர்ஸ்ல பி.எஸ்சி ஆரம்பிக்கல. பிறகு, 2015ல் பி.எஸ்சி வந்துச்சு. அந்த சமயத்துல ஒரு விபத்துல எனக்கு மூட்டு எலும்பு விலகிடுச்சு. வேற வழியில்லாம மறுபடியும் ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டிய சூழல். 2016ல் பி.எஸ்சி சேர்ந்தேன்.

டிப்ளமா படிச்சதால லேட்டரல் என்ட்ரில இரண்டாண்டுதான் படிப்பு. 2018ல் முடிச்சேன். பட்டம் வாங்கினதும் நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழிச்சு என் கையில் என் கனவு நிஜமாகிக் கிடக்குது...’’ நெகிழ்கிறார் சுசீலா.‘‘இதுக்கு என் கணவரும் என்னுடைய மகள்கள் காய்த்ரி, ரஞ்சனி, வித்யா ஆகிய மூவரும்தான் காரணம். அவங்கதான் நிறைய உதவிகள் செய்தாங்க. பி.எஸ்சி படிக்கும்போது ஆங்கிலப் பாடம் இருந்தது. நான் அந்தக் கால தமிழ் மீடியம். படிக்க பயமா இருந்தது. அதனால, பிரிட்டிஷ் கவுன்சில்ல என் பொண்ணுங்க சேர்த்துவிட்டு ஆங்கிலம் படிக்க வைச்சாங்க. என் கணவர் நான் படிக்கும்போது டீ போட்டுக் கொடுப்பார். நான் படிக்கணும்ங்கிறதுல அவருக்கு ரொம்ப ஆர்வம். இப்ப எம்.எஸ்சி முடிச்சிருக்கேன். ஆனா, இன்னும் புராஜெக்ட் வொர்க் பாக்கி இருக்கு. மனம், உடல், ஆன்மா என்கிற தலைப்பில் அந்த புராஜெக்ட்டைப் பண்ணிட்டு இருக்கேன். அதன்பிறகுதான் கோர்ஸ் முடியும். அடுத்து நான் என்ன படிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். நானும் முதியோர்தான். இருந்தும் முதியோர்களுக்கு சேவை செய்யணும்ங்கிற எண்ணம் இருக்கு. அதுக்கேத்த மாதிரி ஒரு கோர்ஸை எங்க இயக்கத்துல அறிமுகப்படுத்தி இருக்காங்க. அதை எடுத்து படிக்கலாம்னு நினைக்கிறேன். பல முதியோர்களின் மனதை சமாதானப்படுத்தும் டிப்ஸ் அதில் கிடைக்கும்னு நம்புறேன்...’’ நம்பிக்கை மிளிர சொல்கிறார் சுசீலா.

தொகுப்பு: பேராச்சி கண்ணன்


Tags : apocalypse ,MSc ,Corona , The 67-year-old apocalypse who wrote the MSc exam online during the Corona era!
× RELATED கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?