×

கொரோனா கால பிரசவங்கள்!

நன்றி குங்குமம்

சென்னையில் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 2781...

மதுரையைச் சுற்றிய நான்கு மாவட்டங்களில்

கொரோனா நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது கர்ப்பிணிகள்தான். அவர்கள் மாதந்தோறும் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று முறையான சிகிச்சை பெற வேண்டும். ஆனால், ஊரடங்கால் வீட்டைவிட்டு கூட அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதுபோக பெரும்பாலான மருத்துவர்கள் கொரோனா பணியில் இருந்ததால் அவர்களுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவர்களைத் தேட வேண்டிய நிலை. அப்படித் தேடி தனியார் மருத்துவமனைகளுக்குப் போனால், கொரோனா அபாயத்தைக் காரணமாக வைத்து அவர்களும் சிகிச்சையளிக்கத் தயங்கினர். இன்னொரு பக்கம் கொரோனா நோயாளிகளால் ஹவுஸ்ஃபுல் ஆனது அரசு மருத்துவமனைகள். இருந்தாலும் ஏழை, பணக்காரர் என்று எந்தவித பாகுபாடுமில்லாமல் அனைத்து கர்ப்பிணிகளும் அரசு மருத்துவமனைகளையே நாடினார்கள். இப்படியான நெருக்கடியிலும் கர்ப்பிணிகளுக்குச் சரியான சிகிச்சையளித்து சாதித்துள்ளனர் அரசு மருத்துவர்கள். ஆம்; சென்னையில் உள்ள சமூக நல மையங்கள், 24 மணி நேர அவசர கால மருத்துவமனை களில் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 2781 கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் நடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, மதுரையைச் சுற்றிய நான்கு மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் 4810 பிரசவம் நடந்துள்ளது, இதில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் 298 பேர்.

இவர்களுக்கு கொரோனாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, மிக கவனமாக பிரசவம் நடந்திருக்கிறது.இப்போது அனைத்து தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். ‘‘தமிழ்நாடு முழுவதுமே கர்ப்பிணிகளுக்கு அரசு வழிகாட்டுதலின்படி பிரசவ தேதி குறிக்கப்படும். அதற்கு 7 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் கொரோனா தொற்று உறுதியான மூன்று, நான்கு கர்ப்பிணிகளுக்கு இராயபுரம் அரசு மருத்துவமனை, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை, கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனையில் தனிப்பகுதியை ஒதுக்கி சிகிச்சை அளித்து வருகின்றனர். பிற மாவட்டங்களில் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு பிரசவ நிலையில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஸ்பெஷலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு மிக கவனமாக சிகிச்சை அளித்து வருகிறோம். எக்காரணத்தைக் கொண்டும் கொரோனா நோயாளிகள் இருக்கும் பகுதிக்கோ, மருத்துவமனைக்கோ சிகிச்சை என்ற பெயரில் அவர்களை அனுப்புவது இல்லை. மட்டுமல்ல; பிரசவித்த தாய்மார்களுக்கு உரிய வைட்டமின் மாத்திரைகள் வழங்கி கவனித்து வருகிறோம்...’’ என்றார் தென் மாவட்டங்களின் சுகாதார துணை இயக்குனர் யசோதா மணி. இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த 28 கர்ப்பிணிகளைக் குணப்படுத்தியுள்ளனர். இதில் 14 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

13 பேருக்கு அறுவை சிகிச்சை மூலமும், ஒருவருக்கு சுகப்பிரசவம் மூலமும் 5 ஆண் குழந்தைகள், 9 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு இந்த தொற்று பரவாமல் தாயையும், சேயையும் காப்பாற்றியிருக்கின்றனர். மட்டுமல்ல; கொரோனா காலத்தில் சில அடிப்படையான சிகிச்சைகள் நடைபெறவே இல்லை. குறிப்பாக வருடந்தோறும் தமிழ்நாட்டில் 8 லட்சம் பேருக்குக் கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்படும். இது சுத்தமாக நடக்கவில்லை. அத்துடன் பல் வலியும் வயிற்று வலியும் உச்சபட்ச வேதனையைத் தரும். அதற்கான சிகிச்சைகளும் நடைபெறவில்லை. ‘‘சொத்தைப்பல், பல் கூச்சம், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், பற்கறை, சீரான அமைப்பில் இல்லாமை, நீரிழிவு நோயாளிகளுக்கான பல் பிரச்னைகள், முதியவர்களுக்கான பல் பிரச்னைகள், பிறவியிலேயே பற்கோளாறுகள், விபத்தின் காரணமாக பல் பாதிப்பு என 32 பல்லில் பிரச்னை இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. அத்துடன் உணவை மென்று உண்ண முடியாத கொடுமையும் ஏற்படும். அது மட்டுமா? அழகு, ஆரோக்கியமான தோற்றம், இளமை என எல்லாவற்றையும் சேர்த்து இழந்து விடுவோம். உங்கள் பல்லில் இரண்டு சொத்தைப் பல்லைப் பிடுங்கினால் உங்கள் முக வடிவமே கோணலாக மாறிவிடும். உடனே மாற்றுப் பல்லைப் பொருத்தினால் மட்டுமே பழைய வடிவத்தைப் பெற முடியும்.

பொதுவாகவே பல் ஆரோக்கியம் பாதித்தவர், பாதிக்காதவர் என இரு தரப்பினருமே 6 மாதத்திற்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்தல், பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை மேற்கொள்ளல் என வலியுறுத்துகிறோம். இது அவர்களின் பல் பாதிப்புக்காக மட்டுமின்றி, அதனால் ஏற்படக்கூடிய மற்ற நோய்களின் தாக்கத்தையும் தடுக்க உதவும். பற்கள் உடைந்திருந்தால் அதன் நிறம் மாறிக்கொண்டே வரும். பற்களின் வேர்களைச் சுற்றிக் கிருமிகளும் பரவும். இதற்கு Root canal treatment அவசியம். ஆனால், இந்த கொரோனா காலத்தில் முற்றிலுமாக இந்த செயல் நின்றுபோனது.மேலும் தமிழக அரசுடன் இந்திய பல் மருத்துவர் சங்கமும் பல்லில் அறுவை சிகிச்சை சார்ந்து எந்த முயற்சியும் வேண்டாம் எனக் கூறியிருந்தது. வாயை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை அடக்குதல், பாக்குகளை பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இப்போது ஊரடங்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆறுமாதம் வீட்டில் இருந்து உணவு களை மென்று நன்றாக சாப்பிட்டிருப்போம். ஆகையால் அனைவருமே ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசிப்பது நல்லது...’’ என்றார் பல் மருத்துவர் ரகு கணேஷ்.

எனக்கும் என் புருஷனுக்கும் பாசிட்டிவ்...சிகிச்சைக்குப் பிறகு சுகப்பிரசவம்!

‘‘மே மாத இறுதியில் எனக்கு பிரசவம் நடந்தது. பிரசவம் நடப்பதற்கு இருபது நாட்களுக்கு முன் காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டேன். டெஸ்ட் எடுத்து பார்த்ததில் கொரோனா பாசிட்டிவ். கணவருக்கும் பாசிட்டிவ். ரொம்பவே சிரமப்பட்டோம். கொரோனா தாக்கத்தால 10 கிலோ வரை எடை குறைய ஆரம்பித்தது. பிரசவ வலி வேறு. நுரையீரலில் சளி தேங்கியதால் இரண்டு நாள் மூச்சுவிட சிரமப்பட்டேன். கொரோனா தொற்று குணமான 3 நாட்களில் பிரசவம் நடந்தது. எடை குறைந்ததால் முழு பலத்துடன் குழந்தையை வெளியே தள்ள சிரமம். அதனால் சிசேரியன் செய்யலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இருந்தாலும் மூச்சு விடுவது சீராக இருந்ததால் சுகப் பிரசவமே நடந்தது. என் மகன் முகத்தைப் பார்த்ததும் அனைத்து கஷ்டங்களும் மறைந்து போனது. இப்போது உணவை ஐந்து வேளையாக பிரித்து சாப்பிட்டு வருகிறேன். நானும் மகனும் ஆரோக்கியமாக உள்ளோம்...’’ என்ற சுகன்யா - ராஜா தம்பதியினர் தங்கள் புகைப்படத்தை வெளியிடக் கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

மருத்துவர்கள் உதவியுடன் வீட்டில் பிரசவம்!

‘‘என் மனைவியின் பிரசவத்தை இயற்கை முறை பிரசவம் என்று தவறாக பலரும் நினைக்கின்றனர். பாத்டப்பில் பிரசவம் என்பது மட்டும்தான் இயற்கை முறை. மற்றபடி அலோபதி மருத்துவர்களைக் கலந்தாலோசித்து, முறையான சிகிச்சையில்தான் பிரசவம் பார்த்துள்ளோம். கொரோனா காலம் என்பதால் மருத்துவமனைக்குச் செல்வது சிரமமான சூழலாக இருந்தது. சுகப்பிரசவம் என்பது தெரிந்தவுடன் மருத்துவரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். இதுவே சிசேரியன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தால் மருத்துவமனையில்தான் சேர்த்திருப்போம்...’’ என்றார் நடிகர் நகுல். ‘‘துவக்கத்தில் இருந்தே சுகப்பிரசவம் என்று முடிவு செய்து விட்டேன். அதற்காகவே உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்து வந்தேன். குறிப்பாக இடுப்புப் பகுதி வளைந்து கொடுக்க சில பிரசவ யோகா செய்தேன். சத்து உணவுகளை முறையாகக் கையாண்டேன். ஒவ்வொரு மாதமும் முறையாக அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொண்டேன்...’’ என்கிறார் ஸ்ருதி நகுல்.

‘‘வலி எடுத்த என்னை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போக ஆம்புலன்ஸோ ஆட்டோவோ கிடைக்கலை...

‘‘எனக்கு இது இரண்டாவது பிரசவம். ஏப்ரல் மாத இறுதியில் குழந்தை பிறந்தது. ஊரடங்கு கடுமையான கட்டுப்பாட்டில் இருந்த சமயம். ஆம்புலன்ஸ் எல்லாமே கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தினார்கள். ஆட்டோக்கள் கூட ஓடவில்லை.ஏப்ரல் 9ம் தேதி காலையில வலி அதிகமாகிவிட்டது. என் கணவர் ராம்குமாரிடம் சொன்னேன். அவரும் எவ்வளவோ முயற்சி செய்தார். எந்த வாகனமும் கிடைக்கவில்லை. கடைசியாக பக்கத்து வீட்டுக்காரரின் பைக்கில் என்னை உட்கார வைத்து கூட்டிட்டுப் போய் மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் யாரும் அங்கே இல்லை. நர்ஸ்களும் குறைவாகத்தான் இருந்தார்கள். பிரசவ வலி அதிகமானது. நர்ஸ்கள்தான் மருத்துவரை அழைத்து வந்தார்கள். சிசேரியன் முறையில்தான் குழந்தை பிறந்தது. நான்கு நாள் மருத்துவமனையில் இருந்தேன். ஊரடங்கு கடுமையாக இருந்ததால் யாரும் என்னை வந்து பார்க்க முடியவில்லை. கடைகள் ஏதும் இல்லாததால் பால், பிரட், சுடுதண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டேன். அம்மா வீட்டில் இருந்து வந்து தேவையான உதவிகளைச் செய்தார்கள். பயந்துகிட்டேதான் மருத்துவமனையில் இருந்தேன்...’’ என்றார் கோவில் பட்டியைச் சேர்ந்த செண்பக மாரி.

தொகுப்பு: திலீபன் புகழ்

Tags : Corona ,deliveries , Corona term deliveries!
× RELATED ஹாமில்டனுக்கு கொரோனா