கப்பீஸ் மீன்களால் மட்டும் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த முடியாது: பூச்சியியல் வல்லுனர்கள் அறிவுரை

வேலூர்: கப்பீஸ் மீன்களால் டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மட்டுமே அவசியமானது என்று பூச்சியியல் வல்லுனர்கள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் சீதோஷ்ண நிலை உருவாகியுள்ளது. டெங்கு பாதிப்பில் அலட்சியம் காட்டினால் உயிர் பலி போன்ற சம்பவங்களுக்கும் வாய்ப்புள்ளது. எனவே, டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துவது அவசியமானது.

இந்நிலையில் ‘பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும். கப்பீஸ் மீன்கள் வளர்ப்பது போன்றவற்றால் மட்டும் டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த முடியாது’ என்று பூச்சியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பூச்சியியல் வல்லுனர்கள் கூறியதாவது: கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த நீர்நிலைகளில் கப்பீஸ் மீன்கள் விடப்படுகிறது. இதனால் கொசுக்கள் முட்டையிட்டால் உடனடியாக மீன்கள் சாப்பிட்டுவிடும். இதுதவிர நீர்நிலைகளில் உள்ள தவளை, பூச்சியினங்களும் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகிறது.

ஆனால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானது கிடையாது. டெங்கு கொசுக்களை பொறுத்தவரை ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர், வீசப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், தேங்காய் மட்டை, டயர்கள், வீட்டின் பிரிட்ஜ் பின்புறம் தேங்கி நிற்கும் தண்ணீர் உள்ளிட்டவற்றில்தான் உற்பத்தியாகி வருகிறது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கப்பீஸ் மீன்கள் உற்பத்தியை அதிகரிப்பதால் மட்டும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியாது. அதேபோல், நீர்நிலைகளில் எண்ணெய் பந்து வீசுவது போன்ற நடவடிக்கைகளால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை ஓரளவு மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். வீடுகளுக்கு அருகே தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், தேங்காய் மட்டைகள் உள்ளிட்டவற்றில் அதிகளவில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகிவிடும்.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மட்டுமே டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு முற்றுப்புள்ளியாக அமையும். எனவே வீட்டையும், வீட்டை சுற்றிலும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். அதிகாரிகள் அபராதம் விதிப்பார்களே என்ற அச்சத்தினால் மட்டுமே சுகாதாரத்தை பராமரிக்கக்கூடாது. நம்முடைய சுகாதாரத்தை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தேவை.அதேபோல் வீட்டின் அருகில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் மண்ணெண்ணெய் துணியில் நனைத்து போடுவது, தேங்காய் எண்ணெய் ஊற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

காய்ச்சலுக்கு நிலவேம்பு, பப்பாளி இலை சாறு குடிக்கலாம்

மழைக்காலம் என்பதால் சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீர் குடிப்பதால் குணமாகிவிடும். அதேபோல் டெங்கு காய்ச்சலுக்கும் நிலவேம்பு குடிநீர்தான் சிறந்த மருந்து என்பதை சித்த மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நிலவேம்பு குடிக்க வேண்டியது அவசியம். அதேபோல் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த அணுக்கள் குறையும். இதனால் உடல் சோர்ந்து உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பப்பாளி இலைச்சாறு 30 மில்லி லிட்டர் அளவுக்கு எடுத்து குடிக்கலாம். தேவைப்பட்டால், தேன் கலந்து குடிக்கலாம். இதனால் ஒரு சில மணிநேரத்தில் ரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Stories:

>